கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்தும், நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். கவாசகி, நிஞ்சா உள்ளிட்ட சூப்பர் பைக்குகளில் சாகசம் செய்யும் வாசன், ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்தி பைக்கின் வேகத்தை வீடியோவாக பதிவு செய்து யூட்யூபில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து கோவை வந்திருந்த போது டிடிஎப் வாசன், அவரை தனது பைக்கின் பின் சீட்டில் அமர வைத்து அதி வேகத்தில் இயக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோ வைரலான நிலையில் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளில் போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த வாசன், அன்று மாலை வரை காத்திருந்து ஜாமின் பெற்றார். தொடர்ந்து தன்மீது ஊடகங்கள் அவதூறு பரப்புவதாக கூறி மிரட்டல் விடுக்கும் தொனியில் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை அவிநாசி சாலையில் தென்னம்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது பெங்களூருக்கு தப்பிச் செல்லும் என்ற டிடிஎஃப் வாசனை மடக்கிப் பிடித்தனர். இதைடுத்து அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். வாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், ஊடகங்கள் தன்னை பற்றி தொடர்ந்து தவறான செய்திகளை பரப்புவதாகவும், வீடியோவில் பேசியது அதன் வெளிப்பாடுதான் எனவும் தெரிவித்தார். புறவழிச் சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டியது தவறு தான் என்றும், தற்போது அதை உணர்ந்து படிப்படியாக வேகத்தை குறைத்துக் கொள்ள போவதாகவும் வாசன் தெரிவித்தார்.