ஒருவழியாக 15-வது தி.மு.க உட்கட்சித் தேர்தல் கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல்தான் கடைசி. அக்டோபர் 7-ம் தேதி ஒருநாள் மட்டும் மனுத்தாக்கல் நடக்கிறது. அதன்பிறகு, தேர்வான மொத்த பொறுப்பாளர்களுக்கும் அக்டோபர் 10-ம் தேதி நடக்கிற பொதுக்குழுவில் ஒப்புதல் கொடுக்கப்படும்.
இந்தச் சூழலில், மற்ற மாவட்டங்களை விட சென்னை மேற்கு மாவட்டத்தில்தான், சிட்டிங் மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசுக்கு எதிராகவே, அவருக்குக் கீழுள்ள பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர். சிற்றரசு, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதியின் தீவிர ஆதரவாளர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ‘அப்படியிருக்கும்போது, சிற்றரசுக்கு எதிராக ஏன் இந்த மோதல் போக்கு?’ என்பது குறித்து சென்னை மேற்கு மாவட்ட மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.
“ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பிறகு, சென்னை மாவட்ட தி.மு.க அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்ரமணியன் கைகளுக்கு முழுவதுமாகச் சென்றுவிட்டது. இதர மாவட்டப் பொறுப்பாளர்களில், இளைய அருணா சேகர்பாபுவுடனும், மயிலை வேலு மா.சுப்ரமணியனுடனும் அண்டர்ஸ்டாண்டிங்கில் செல்வதால், அவர்கள் மாவட்டத்திற்குள் பிரச்னை பெரிதாக இல்லை. ஆனால், சிற்றரசு யாருடனும் ஒட்டி உறவாடுவதில்லை. உதயநிதியோடு மட்டும்தான் அவர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.
இந்த நெருக்கம் பலரது கண்ணையும் உறுத்துகிறது. இந்தச் சூழலில்தான், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் எஸ்.மதன்மோகன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அனுபுதுரை, ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு ஆகியோர், சிற்றரசுவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மனுத்தாக்கல் செய்தனர். இது சிற்றரசுக்கு கடும் அதிர்ச்சி.
இத்தனைக்கும் சிற்றரசு உதயநிதி மூலம் மாவட்டப் பொறுப்பாளரானது மட்டுமின்றி, அவரின் பேக்கப்பில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது அந்த மூவருக்கும் நன்றாகத் தெரியும்.
தன் மகனின் படிப்பு சம்பந்தமாக லண்டன் சென்றிருக்கிறார் உதயநிதி. வெளிநாடு கிளம்புவதற்கு முன்னதாக, ‘சிற்றரசு தான் மாவட்டச் செயலாளர்’ என்பதை இதர நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார். ஆனால், அவர் வார்த்தையும் உதாசீனப்படுத்தி, சிற்றரசுவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், உதயநிதியும் அப்செட். லண்டனிலிருந்தபடி அவர் தொடர்புகொண்டு விசாரித்தபோது, ‘எங்க பலத்தைக் காட்டத்தான் வேட்புமனு தாக்கல் செய்தோம். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியாதுனு தெரியும்’ என்று விளக்கமளித்திருக்கிறார்கள் சிற்றரசுக்கு எதிராகக் களமிறங்கியவர்கள். இந்த கூத்து ஒருபுறமிருக்க, இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது.
தற்போது தேர்வாகியிருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களில், கணேஷ்பிரபு என்கிற ராஜேஷ் என்பவரது பெயர் 6-வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மருமகன்தான் இந்த ராஜேஷ். பொதுக்கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஒட்டப்படும் போஸ்டர் ஒன்றில்கூட ராஜேஷின் பெயர் இருந்தது கிடையாது. பகுதிச் செயலாளர் மதன்மோகனை இருமுறை இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார் ராஜேஷ். அதனால்தான், உழைத்தவர்களுக்கும், சீனியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை ராஜேஷுக்குக் கொடுத்திருக்கிறார் மதன்மோகன்.
அதேவேளையில், சிற்றரசு மாவட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவின் தலையீடும் அதிகம். தன் மாவட்டத்திற்கு அருகாமையிலிருக்கும் மாவட்டம் என்பதால், தனக்குத் தோதான ஒருவர் மாவட்டப் பொறுப்பில் இருப்பதையே சேகர்பாபு விரும்புகிறார். ஆனால், சிற்றரசுவிடம் அது எடுபடவில்லை. மொத்தத்தில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியும், மேற்கு மாவட்டமும் சிற்றரசு ஒருவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டும் புலப்படுகிறது!” என்றனர்.
மாவட்டச் செயலாளர் சிற்றரசு தரப்பில் பேசியவர்கள், “மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலாளரில் தொடங்கி, பொதுக்குழு உறுப்பினர்கள் வரை மொத்தமாக ஒரு பேனல் என்றழைக்கப்படும். ஒரு பேனலில் ஒரு மாவட்டச் செயலாளர் பெயர்தான் எழுதப்பட வேண்டும். செயற்குழுவுக்கு தொகுதிக்கு மூன்று பேர் தேவை. ஆனால், மதன்மோகன் தரப்பிலோ, மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு அவர் பெயரையும், மா.பா.அன்புதுரை பெயரையும் சேர்த்தே எழுதியிருந்தார்கள். செயற்குழு, பொதுக்குழுவுக்கும் போதுமான ஆட்கள் அவர்களிடம் இல்லை. இதையெல்லாம் நாங்கள் எதிர்த்து வாதிட்டோம். தலைமையிலிருந்து அவர்களிடம் விசாரணை செய்தபோது, ‘சும்மா மனுத்தாக்கல் செய்தோம்’ என்றனர். இதனால், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கே டென்ஷன் எகிறிவிட்டது” என்றனர்.
மதன்மோகன் தரப்பில் பேசியபோது, “தமிழகத்திலுள்ள அத்தனை மாவட்டங்களிலும் அமைச்சர்களை எதிர்த்து எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. மற்ற அனைத்து மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து பலரும் மனுத்தாக்கல் செய்தனர். அதனால், மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று யாருமே சொல்ல முடியாது. அதுதான் கட்சியின் ஜனநாயகம். இருந்தபோதும், மீண்டும் சிற்றரசுதான் வரப்போகிறார் என்பது முன்பே உறுதியாகிவிட்டதால், பெயரளவுக்கு மனுத்தாக்கல் செய்தோம். அவ்வளவுதான்!” என்றதோடு முடித்துக் கொண்டனர்.
எது எப்படியோ, வெளிநாடு சென்றிருக்கும் உதயநிதி, சென்னை திரும்பியதும் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு மண்டகப்படி இருக்கும் என்கிறது அறிவாலய வட்டாரம்.