மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல்நாளிலேயே 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.
அமரர் கல்கியின் வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை அதேபெயரில் திரைப்படமாக எடுத்துமுடித்துள்ளார் மணிரத்னம். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில். நேற்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படித்தவர்களுக்கு சிறிது ஏமாற்றமாக உள்ளது என்று கூறப்பட்டாலும், பெரும்பாலான பார்வையாளர்கள் படம் மிரட்டலாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
இதனால் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல்நாளிலேயே 25.86 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் அஜித்தின் ‘வலிமை’ (ரூ. 36.17 கோடி) படமும், விஜயின் பீஸ்ட் (ரூ.31.4 கோடி ) படமும் முதல் நாள் வசூலில் டாப்பில் உள்ளன. இதனைத் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 25.86 கோடி ரூபாய் வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மற்றும் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்களையும் முந்தியுள்ளது ‘பொன்னியின் செல்வன்’.
மேலும் முன்பதிவு டிக்கெட் செய்யப்பட்ட படங்களில் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தை அடுத்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது ‘பொன்னியின் செல்வன்’. அந்தவகையில் முன்பதிவு டிக்கெட் பதிவின் வாயிலாக மட்டுமே இந்த திரைப்படம் 16 கோடி ரூபாய் முதல் 17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. மேலும், கேரளாவில் 2,5 கோடி ரூபாயும், இந்தியில் 1,5 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 5 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது ‘பொன்னியின் செல்வன்’.
அத்துடன் அமெரிக்காவில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் மட்டும் 11 கோடி ரூபாய்க்கும் மேல் ‘பொன்னியின் செல்வன்’ படம் வசூலித்துள்ளது. மொத்தமாக 50 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் தொட்டுள்ளது.