டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 5ஜி தொலைத்தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் நாட்டின் 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 5ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிபடுத்தி இருந்தன. இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் ஆய்வு செய்தார். அதில் 5ஜி அடிப்படையிலான ட்ரோன்கள், இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்களை பிரதமர் பார்வையிட்டார்.
முதல்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வரவுள்ளது. பின் 5ஜி சேவையை குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், இந்தியாவை அடுத்த வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 5ஜி சேவை வழிவகுக்கும். 5ஜி சேவை கிராம மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். ஏழை, எளிய மக்கள் வரை இந்த 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல வேண்டியது நமது பொறுப்பு. மேலும் 5ஜி தொழில்நுட்பம் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். 5ஜி அறிமுகம் 130 கோடி இந்தியர்களுக்கு தொலைத்தொடர்பு துறையின் பரிசு. புதிய இந்தியா தொழில்நுட்பத்தின் நுகர்வோராக இல்லாமல் அதனை மேம்படுத்தி செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
கைபேசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் 2வது இடம் பிடித்துள்ளது. உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கும். 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என பெருமிதம் தெரிவித்தார். மேலும் 5ஜி மூலம் பல புதிய வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கப்போகிறது. டிஜிட்டல் இந்தியா என்பது இந்திய இளைஞர்களின் வளர்ச்சிக்கான திட்டமாக பார்க்கப்படுகிறது என பேசினார்.