கோவையில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சலுகை இருந்தும்கூட ” நான் ஓசியில போக மாட்டேன்” என்று ஒரு பாட்டி கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சில நாட்களுக்கு முன்பு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்து திட்டத்தை இலவசம் என்று சொல்லாமல் ”ஓசி” என குறிப்பிட்டார். அதற்கு எதிர்வினையாற்றவே அந்த மூதாட்டி அவ்வாறு செய்தததாகவும் சொல்லப்பட்டது.
மேலும்,. அதிமுகவை சேர்ந்த துளசியம்மாள் என்ற மூதாட்டியை அவ்வாறு நடிக்க வைத்து வேண்டுமென்றே வீடியோ எடுத்து பரப்பியதாக கோவையைச் சேர்ந்த சில அதிமுகக்காரர்கள் மீது திமுகவினர் குற்றசாட்டுகளை வைத்தனர். இதற்கு கருத்து தெரிவித்து வந்த நெட்டிசன்கள், அமைச்சர் பேசியது சரி என்றால் அந்த பாட்டி நடந்துகொண்டதும் சரிதான்.. அது எதிர்வினையல்ல , சுயமரியாதையின் வெளிப்பாடு என்றும் பாட்டிக்கு ஆதரவாக பேசி வந்தனர்.
இந்த நிலையில், கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டு வயதான பாட்டி வாக்குவாதம் செய்த விவகாரத்தில் பாட்டி துளசியம்மாள் உட்பட 4 பேர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த புகாரை கொடுத்தது திமுகவினரா அல்லது பேருந்து நடத்துனரா என்று தெரியவில்லை. எந்த புகாரின் அடிப்படையில் அந்த பாட்டியின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரம் முதலில் வெளியாகவில்லை.
தமிழக அரசின் பெண்கள் நல திட்டத்தை அவமதிக்கும் விதமாக ஒரு மூதாட்டியை தூண்டிவிட்டு வீடியோ எடுத்துள்ளார்கள் என்ற காரணத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இதில் அந்த வயதான பாட்டி சிக்கிக்கொண்டுள்ளார் என்றும் நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வந்தனர். அதே சமயம், ஓசியில் போக மாட்டேன் என்று சொன்னவர் மீதே வழக்கு என்றால் மக்கள் திட்டத்தை ஓரு அமைச்சர் பொதுவெளியில் ”ஓசி” என்று சொல்வது நியாயமா என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், பேருந்து பயணம் தொடர்பாக மதுக்கரை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவர் மீது மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.