காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இருந்த இந்திய ‘மேப்’பில் காஷ்மீரின் பாதி பகுதிகள் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறாதது ஆளும் பா.ஜ.க-வினரால் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, அந்த பக்கம் சரி செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாரும் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை. எனது குழு செய்த தவறு. தவறு சுட்டிக்காட்டப்பட்டதும் நாங்கள் அதை உடனடியாக சரிசெய்தோம். மேலும், என்னை மீறி நடந்த தவறுக்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,” காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘யுனைட் இந்தியா அணிவகுப்பு’க்கு எதிராக பாஜக எந்தவொரு சிறிய காரணத்தையும் வெடிமருந்துகளாக பயன்படுத்துகிறது. ராகுல் காந்தியின் தற்போதைய ‘பாரத் ஜோடோ யாத்ரா’ மீதான கவனத்தை திசைதிருப்ப பா.ஜ.க இந்த சம்பவத்தின் மூலம் முயற்சித்து, மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.