ஓசி டிக்கெட் வேண்டாம் எனக்கூறி அரசுப் பேருந்து நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது, அரசு குறித்து அவதூறு பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் மக்களை பார்த்து, “உங்க ரேஷன் கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய். கொடுத்தாரா, இல்லையா..?; வாங்குனீங்களா, வாயை திறங்க.. 4 ஆயிரம் ரூபாய் வாங்குனீங்களா..?. இப்ப பஸ்ல எப்படி போறீங்க..?. இங்கிருந்து கோயம்பேடு போனாலும், வேற எங்க போனாலும் ஓசி, ஓசி. ஓசி பஸ்சுல போறீங்க” என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.
இந்நிலையில், சமீபத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் ‘நான் ஓசியில் பயணம் செய்யமாட்டேன்; டிக்கெட் கொடு’ என நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘பெண்களுக்கு இலவசம்’ என தொடர்ந்து நடத்துநர் கூறியும், ‘வேண்டாம்; டிக்கெட் கொடு’ என வற்புறுத்தி டிக்கெட் வாங்கிக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் பேருந்தில் நிகழ்ந்ததும், கோவை குரும்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மூதாட்டி துளசியம்மாள், வீடியோ எடுத்து வெளியிட்ட பிருத்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது அரசு குறித்து அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.