புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அண்மையில் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற கொள்கையைப் பின்பற்றுவது என்று முடிவு எட்டப்பட்டது. அதன்படி, தான் வகித்துவந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கார்கே நேற்றிரவே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவரான சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சிப் பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்துவிட்டு அதனை மாநிலங்களவைத் தலைவருக்கு தெரிவிப்பார்.
காந்தி குடும்பம் விரும்பும் கார்கே: கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவராக இருக்கும் சூழலில் கார்கேவை அடுத்த தலைவராக்க காந்தி குடும்பத்தில் முழு ஆதரவு கிடைத்துள்ளது. ஆதலால் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வாகும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கார்கேவை எதிர்த்து ஜி23 குழுவின் முக்கிய பிரமுகரான சசி தரூர் களமிறங்கியுள்ளார். ஆனால், ஜி23 குழுவில் உள்ள பெரும்பாலானோரே மல்லிகார்ஜுன கார்கேவை ஆதரிக்கின்றனர். ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் கேஎன் திரிபாதி தான் மூன்றாவது வேட்பாளர். திக்விஜய் சிங் கடைசி நேரத்தில் வேட்புமனு தாக்கலை தவிர்த்தார். இந்நிலையில் கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளது எல்லா சலசலப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் பின்னால் இருந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்துள்ளது.
முன்னதாக, நேற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பாபேட்டியளித்த கார்கே “சிறுவயது முதல் காங்கிரஸுக்காக உழைத்து வருகிறேன். பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்.17-ல் நடைபெறுகிறது.