மயிலாடுதுறை அருகேயுள்ள கிராம குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பொறிவைத்து பிடித்தனர். எஞ்சிய குரங்குகளைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் மணவெளி தெரு, அக்ரஹாரம், கொல்லர் தெரு, தோப்புத் தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 500 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில குரங்குகள் வந்துள்ளன. அடர்ந்த பெரிய மரங்களில் வசித்து வந்த குரங்குகள் தற்போது பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக மாறியுள்ளன.
அவற்றின் உணவு தேவைக்காக அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் குடிசைகளின் கூரையை பிய்த்தும், ஓட்டு வீடுகளின் ஓடுகளைக் கலைத்தெறிந்தும் உள்ளே புகுந்து சமைத்து வைத்துள்ள உணவுகளை பாத்திரத்துடன் தூக்கிச் சென்று விடுகின்றன. இதனால் பொது மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எத்தகைய தடுப்பு பணிகளை மேற்கொண்டாலும் குரங்குகள் வீட்டில் உள்ளே புகுந்து உணவுகளை தின்று தீர்த்து வந்தன. உணவை எடுக்க வரும் குரங்குகள் சிறுவர், சிறுமிகளை மட்டுமன்றி பெரியவர்களையும் கடித்துக்குதறி காயப்படுத்திவிடுகின்றன. குரங்குகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மாலை வேலைகளில் வீட்டை விட்டு வெளியே வருவதைப் பொதுமக்கள் தவிர்த்து வந்தனர்.
குரங்குகளின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில்,” வனத்துறையினர் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்தவேண்டும்” என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சித்தமல்லி கிராமத்தில் கூண்டு அமைத்து அதனுள் பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வைத்திருந்தனர்.
உணவு எடுப்பதற்காக கூண்டின் உள்ளே வந்த பெரிய மந்தி, குட்டிகள் உள்பட 11 குரங்குகளை முதல்கட்டமாக பிடித்தனர் அந்தக் குரங்குகளை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டனர். எஞ்சிய குரங்குகளைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து காத்திருக்கின்றனர். வனத்துறையினர் குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அப்பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.