ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தொலைத்தொடர்பு துறையில் நுழைந்தது. இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் மலிவான விலையில் டேட்டா என விரைவாகவே அனைவரின் வீட்டிற்குள்ளும் ஜியோ நுழைந்துவிட்டது. அந்த வகையில், இந்தியாவில் 5G இணையசேவையை பிரதமர் மோடி, இந்திய மொபைல் மாநாட்டில் (IMC) இன்று திறந்துவைத்தார். மேலும், 5G சேவைகள் சில நகரங்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து நகரங்களுக்கும், அனைத்து வகை வாடிக்கையாளர்களுக்கும் 5G இணைய சேவையை ஜியோ அளிக்கும் என ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) மாநாட்டில் முகேஷ் அம்பானியும் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது,”அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்கு, நம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும், ஒவ்வொரு தாலுகாவிற்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஜியோவின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் இன்று வலியுறுத்த விரும்புகிறேன்.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில், வரும் தீபாவளிக்குள் 5ஜி சேவையை ஜியோ அளிக்கும் என அம்பானி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறியிருந்தார். மேலும், ஜியோவின் 5ஜி தயாரிப்புகள் அனைத்தும் ஆத்ம நிர்பார் என்ற முத்திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 5ஜி சேவைகள் உயர் தர கல்வியையும், திறன் மேம்பாட்டையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் எனவும் கூறினார்.
மேலும் கூறிய அவர், “5ஜி சேவை மூலம் தற்போது கிராமப்புற மற்றும் தொலைத்துர பகுதிகளில் உள்ள சாதாரண மருத்துவமனைகளை, ஸ்மார்ட் மருத்துவமனைகளாக மாற்ற முடியும். இதனால், அனைத்து மக்களும் உயர்தர மருத்துவ சேவையை பெற முடியும். அதிவேக இணையத்தின் மூலம், இந்தியா எங்கும் உள்ள மருத்துவர்கள், நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம் விரைவாகவும், தெளிவாகவும் சிகிச்சையளிக்க இயலும்.
விவசாயம், வணிகம், தொழிற்சாலை, போக்குவரத்து உள்பட பல துறைகளில் தகவல் மேலாண்மையை நாம் மேம்படுத்துவது மூலம், கிராமப்புறங்களையும், நகரப்புறங்களையும் இணைக்கும் பாலமாக 5ஜி இருக்கும். அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை நாம் கொண்டுவரும்போது, உலகத்தின் நுண்ணறிவு தலைநகராக இந்தியா திகழும். இதன்மூலம், உயர்தரமான சாஃப்ட்வேர்களையும், சேவைகளையும் இந்திய நிறுவனங்களால் அளிக்க முடியும்.
5ஜி பல்வேறு தொழில்முனைவோரை தொழில் தொடங்க ஊக்கமளிக்கும். இது கோடிக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும். 5ஜி சேவை என்பது டிஜிட்டல் காமதேனு போன்றது. நீங்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் 5ஜி சேவை வழங்கும்” என்றார்.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், கௌதம் அதானியின் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா அனைத்தும் 5ஜி ஏலத்தில் மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் எடுத்தன. 5G வேகம் 4G வழங்கும் வேகத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும், மேலும் இது எந்த தாமதமும் இல்லாமல் இணைப்பை வழங்கும். இணைக்கப்பட்ட பில்லியன் கணக்கான சாதனங்கள் உடனடியாக தரவைப் பரிமாறிக் கொள்வதையும் இது சாத்தியமாக்கும்.