தேனி: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழந்த விவகாரத்தில் ஆட்டுக்கு கிடை போட்டிருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம்கோம்பை வனப்பகுதி அருகே அதிமுக எம்.பி.யும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 27ம் தேதி அந்த தோட்டத்தை சுற்றிஇருந்த வேலியில் சிக்கிய 2 வயது சிறுத்தைப்புலியை மீட்க வனத்துறை முயற்சித்தது. அப்போது வனத்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடிய சிறுத்தைப்புலி மறுதினமே அதே வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அதே தோட்டத்தில் ஆடுகளுக்கு தற்காலிகமாக கிடை அமைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். நில உரிமையாளரை விட்டுவிட்டு வனத்துறை தற்காலிக கிடை அமைத்தவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வனத்துறையினர் தங்களை பாதுகாத்துக்கொள்ள அப்பாவி மக்களை சித்திரவதை செய்வதாக கால்நடை வளர்ப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அதே வேலையில் வேலியில் சிக்கியது 2 சிறுத்தைப்புலிகள் என்றும், அதில் 1 மீட்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மற்றொரு சிறுத்தைப்புலியே உயிரிழந்ததாக வனத்துறை விளக்கமளித்துள்ளது.