நடிகர் சங்கம் மற்றும் அதன் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர் உதயா, பாபி ஆகிய மூவரையும் ஆறு மாத காலத்திற்குச் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
முன்னதாக ஒரு தகவல். கடந்த 2019ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்தது. அதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டரை ஆண்டுகளாக எண்ணப்படாமலே இருந்தன. அதனையடுத்து கடந்த மார்ச்சில் சங்கத்தின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் கே.பாக்யராஜுக்கும், உதயாவிற்கும் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் இவர்கள் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து உண்மைக்குப் புறம்பான பொய்யான கருத்துகளை மற்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் மூலம் பரப்பி வருவதாகவும், அதைக் கருத்தில் கொண்டு, ‘உங்களை ஏன் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கக் கூடாது?’ என விளக்கமும் கேட்கப்பட்டிருந்தது. அதற்குப் பதினைந்து நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனையொட்டிய நடவடிக்கையே இந்த நீக்கம் என்கிறார்கள்.
இது குறித்து நடிகர் உதயாவிடம் பேசினேன்.
“உண்மையான தகவல்தான். நேற்று மாலை நீக்கினதா சொல்றாங்க. இடைக்கால நீக்கமா 6 மாதத்துக்கு இந்த நடவடிக்கை. கடிதம் மூலம் பாக்யராஜ் சாருக்கும் எனக்கும் தெரிவிச்சிருக்காங்க. லெட்டர் வந்தாலும், அது என் கைக்கு இன்னும் வந்து சேரல. இந்த நடவடிக்கை வெறும் காழ்ப்புணர்ச்சிதான். ஷோ காஸ் கடிதத்திற்கு உரிய விளக்கம் அப்பவே கொடுத்துட்டோம். நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் பேசிய விஷயத்தை பொதுச் செயலாளர் உடனே யூடியூப்பில் வெளியிட்டுவிட்டார். பொதுக்குழுவில் பேசினதை யூடியூப்பில் வெளியிட்டவங்க மேல ஆக்ஷன் எடுக்காமல், சம்பந்தமே இல்லாமல் எங்க மீது நடவடிக்கை எடுத்திருக்காங்க. இது காழ்ப்புணர்ச்சிதான். இதனாலதான் நடிகர் சங்கத்திலிருந்தே நாங்க வெளியே வந்தோம். கட்டடம் கட்டுற வேலையைப் பார்க்காமல் இந்த மாதிரி வேலையைத்தான் பார்த்துட்டு இருக்காங்க!” என்கிறார் உதயா