டெல்லி: 2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும 5ஜி சேவை கிடைக்கும் என ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்ற 6-ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மொபைல் சேவை மற்றும் இணையதள சேவை வழங்கும் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, ‘2023 டிசம்பருக்குள் ஒவ்வொரு இந்தியரும் 5ஜி சேவையைப் பெறுவார்கள் என ஜியோ உறுதியளிக்கிறது. வருகிற தீபாவளி நாளுக்குள் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் முழுமையான 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றவர் முதற்கட்டமாக, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது என்றார்.
தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டு 2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும் முழுமையான 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும் என்றவர், இதற்காக ஜியோ மொத்தம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது என்றார்.
மேலும், ஜியோ 5ஜி சேவை, உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் ஒவ்வொருவரையும் இணைக்கும். மேலும் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட சேவையாக இருக்கும். சீனா, அமெரிக்காவைவிட இந்தியாவை தரவு சார்ந்த பொருளாதார நாடாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்றும் கூறினார்.
6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….