கலிபோர்னியா: ‘ஆப்டிமஸ்’ எனும் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது டெஸ்லா. அதன் அறிமுக விழாவில் மேடைக்கு வந்த அந்த ரோபோ தனக்கு வலது பக்கத்தில் நின்று கொண்டிருந்த டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கை நோக்கி கையசைத்துள்ளது. அந்த வீடியோ இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் வெளியானது. அதில் சிட்டி எனும் ஹியூமனாய்டு ரோபோ செய்யாத சேட்டைகளே இல்லை. கிட்டத்தட்ட அதே போன்றதொரு காட்சி தான் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா அலுவலகத்திலும் நடந்துள்ளது. அங்கு சிட்டியை போலவே ஆப்டிமஸ் எனும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தை வசந்த காலமாக மாற்ற வேண்டுமென்ற முயற்சியில் இயங்கி வருபவர் மஸ்க். விண்வெளி சுற்றுலா, நியூராலிங்க் நிறுவனத்தின் மூலம் மனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் முயற்சி, சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பு என பலவற்றை சொல்லலாம். அந்த முயற்சிகளில் மற்றொன்றாக சேர்ந்துள்ளது ஆப்டிமஸ்.
டெஸ்லா நிறுவனம் உருவாக்கியுள்ள மாதிரி ஹியூமனாய்டு ரோபோ இது. கடந்த பிப்ரவரி முதல் இந்த ரோபோவை அந்நிறுவனம் சோதித்து வருவதாக தகவல். மேடைக்கு வரும் அந்த ரோபோ, மஸ்க் மற்றும் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தது ஆரவாரம் செய்துள்ளது.
டெத்தரிங் இல்லாமல் மேடையில் ரோபோ இயக்கப்பட்டுள்ளதாகவும் டெஸ்லா தெரிவித்துள்ளது. இந்த ரோபோவை உற்பத்தி செய்து, ஒரு ரோபோவை 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் அதற்கான ஆர்டரை டெஸ்லா எடுக்கும் என தெரிகிறது.
“வரும் காலத்தை ஆப்டிமஸ் வசந்த காலமாக மாற்றும். இந்த ரோபோவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான வேலைகள் நிறைய உள்ளன” என மஸ்க் தெரிவித்துள்ளார்.
— Tesla (@Tesla) October 1, 2022