கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரைக்கும் பயணிக்கும் ‘மஹநுவர ஒடெசி’ சொகுசு சுற்றுலா புகையிரதம் இன்று (01) முற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்களின் தலைமையில் கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
இந்த சொகுசு விசேட புகையிரதம் தலதா மாளிகையை தரிசிப்பதற்கும் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவைப் பார்வையிடுவதற்கும் வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அநுராதபுரம் புனித பூமியை தரிசிப்பதற்குச் செல்லும் பக்தர்களுக்காகவும் மிகவிரைவில் கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் வரை பயணிக்கும் விசேட புகையிரத ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
இன்று தொடக்கம் ஒவ்வொரு வார இறுதியிலும் பயணத்தை ஆரம்பிக்கும் மஹநுவர ஒடெசி புகையிரம் மு.ப 6.30 இற்கு கொழும்பிலிருந்த புறப்பட்டு மு.ப 9.18 இற்கு கண்டியைச் சென்றடையும். மீண்டும் பி.ப 4.50 இற்கு கண்டியிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பி.ப 7.40 இற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். அதிசொகுசு மற்றும் வளிச்சீராக்கிகள் வசதிகளைக் கொண்ட 44 இருக்கைகளுடன் கூடிய முதலாம் வகுப்பு கூடங்கள் 04 உம், 44 இருக்கைகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு கூடங்கள் 03 உம் உண்டு. மொத்தமாக 308 இருக்கைகளைக் கொண்டுள்ளதுடன், புகையிரதத்தில் போசனைசாலையும் உள்ளது.
வளிச்சீராக்கி அதிசொகுதி முதலாம் வகுப்பு ஒதுக்கப்பட்ட ஆசனமொன்றின் பயணச்சீட்டு கட்டணம் 2000 ரூபாய்கள், அத்துடன், 2 ஆம் வகுப்பு ஒதுக்கப்பட்ட ஆசனமொன்றின் பயணச்சீட்டு கட்டணம் 1500 ரூபாவாகும். கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரைக்கும் மீண்டும் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் இப்புகையிரதம் கம்பஹா, வெயாங்கொடை, பேராதனை மற்றும் சரசவி உயன ஆகிய புகையிரத நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்பட்டு பயணத்தை மேற்கொள்ளும். ஒரு பயணமுடிவுக்கான மொத்தப் பயண நேரம் 2 மணித்தியாலயங்களும் 48 நிமிடங்களாகும்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட இச்சொகுசுப் புகையிரதம் அதன் பயணத்தை ஆரம்பித்த முதலாவது பயணத்திலேயே அதிகளவான பயணிகள் இணைந்து கொண்டமை முக்கியமான விடயமாகும். கொழும்பிலிருந்து காலையில் புறப்பட்டு கண்டி நகரத்தை சுற்றிக் கண்டுகளித்து மீண்டும் மாலையில் கொழும்பை நோக்கி பயணிப்பதற்கு ஏற்புடைய வகையில் மிகவும் இலகுவான பயணத்தை மக்களுக்கு ஏற்பாடு செய்து வழங்கும் வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இவ்விசேட புகையிரதத்தின் பயண ஆரம்ப நிகழ்வில் புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் திரு. குமார குணசிங்க உள்ளிட்ட புகையிரதத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்குரிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் கீழ்வரும் இணைய இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்