சென்னை: சென்னையில் காவல்துறை 15நாட்கள் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்துள்ள நிலையில், அக்டோபர் 11ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெறும் என திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்து உள்ளன. இந்த பேரணி காவல்துறையினரின் உத்தரவை மீறி நடத்தப்படுமா அல்லது காவல்துறை அறிவித்த தனது தடையை விலக்கிக்கொள்ளுமா என்பது விரைவில் தெரிய வரும்.
மகாத்மா காந்தி பிறந்த நாளன்று மாநிலம் முழுவதும் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்ற நிலையில், அதை எதிர்த்து, திமுக கூட்டணி கட்சிகள், மனித சங்கிலி பேரணி நடத்துவோம் என அறிவித்ததால் சர்ச்சையானது. இதையடுத்து, எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி கிடையாது என தமிழகஅரசு அறிவித்த நிலையில், நீதிமன்ற யோசனையின்படி, ஆர்எஸ்எஸ் பேரணி நவம்பர் 6ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி, வரும் 11-ம் தேதி நடைபெறுவதாக விசிக உள்பட திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளனர். விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலா மைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சி மற்றும் மக்கள் இயக்கங்களுடன் பேசி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் வருகிற 11 ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியைச் சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதுமான இந்த மனிதச் சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.