மேற்கு வங்க கவர்னருக்கு உடல்நலக்குறைவு – சென்னை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் இல.கணேசன். பாஜக மூத்த தலைவரான இவர், தேசிய செயலாளராகவும், தேசிய துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன்பு இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவும் இருந்தார். 

இவர், தென் சென்னை மக்களவை தொகுதியில் 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றுக்கொண்டார். 

தொடர்ந்து, எம்பி பதவி காலாவதியாகும் முன்பே, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர், துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து, இல. கணேசன் மேற்கு வங்கத்தின் கவர்னராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். சமீபத்தில், துரந்தோ கோப்பை பரிசு வழங்கும் விழாவில், இந்திய கால்பந்து அணி கேப்டனும், பெங்களூரு எஃப்சி அணி கேப்டனுமான சுனில் சேத்ரியை புகைப்படத்திற்காக தள்ளிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டார். அதன்மூலம், நாடு முழுவதும் பல்வேறு ஊடகங்களில் கவனத்தையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சென்னை வந்த இல. கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

La Ganeshan, இல கணேசன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.