ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு கூலித் தொழிலாளர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் தேனி சின்னமனூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அம்மாபட்டி நடுத்தெருவில் வசிக்கும் செல்வராஜ் (65) மற்றும் அவரது உறவினர் மணிகண்டன் என்ற அப்பாச்சி (67) ஆகிய இருவரும் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வயல்வெளி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது துர்க்கை அம்மன் கோவில் அருகே வந்தபோது கம்பத்திலிருந்து சின்னமனூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சின்னமனூர் காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரினை ஒட்டிவந்த போடியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரை போலீசார் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீரங்கத்தில் கடத்தப்பட்ட குழந்தை சமயபுரத்தில் மீட்பு – சிசிடிவியில் சிக்கிய பெண் யார்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM