திருமலை’ திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்றிரவு நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்பசுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்க்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், நாச்சியார் திருக்கோலத்தில் உள்ள உருவத்தை, கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்தார் என்பது போல் கிருஷ்ணர் தனி பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிகொடுத்த கிளியுடன் கூடிய மாலைகள் இன்று காலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. சுவாமி வீதியுலாவின்போது கலைக்குழுவினர் மற்றும் பக்தர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், பரதநாட்டியம் உள்பட பாரம்பரிய நடனமாடியும், இசைக்கருவிகளை இசைத்தபடியும், பஜனைகள், கீர்த்தனைகள் பாடியபடியும், பல்வேறு சுவாமி வேடம் அணிந்தும் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்றிரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது மலையப்பசுவாமி தங்க கருட வாகனத்தில், மகா விஷ்ணு அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார். மேலும் மூலவர் ஏழுமலையானுக்கு தினமும் அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகரகண்டி ஆரம் ஆகியவை மலையப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும். கருட சேவையையொட்டி 4 மாட வீதியில் 3 லட்சம் பக்தர்கள் சுவாமி வீதி உலாவை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருட சேவையை காண காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்தபடி உள்ளனர். பாதுகாப்பு பணிகளில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 2,300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.