1.92 லட்சம் பேர்… 3,790 பேருந்துகள்… திணறிய திருப்பதி ஏழுமலையான்- தத்தளித்த திருமலை!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவை நிகழ்வான கருட சேவை நேற்று நடைபெற்றது. கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக கருட சேவையில் மலையப்ப சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரம்மோற்சவ நிகழ்வு களையிழந்து காணப்பட்டது. அந்த குறையை போக்கும் வண்ணம் நடப்பாண்டு வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏழுமலையான் பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் முறையான திட்டமிடல் காரணமாக அமைதியான முறையில் நடத்தி முடித்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.

வழக்கத்தை விட கூடுதலான RTC பேருந்துகளை இயக்க APSRTC ஏற்பாடு செய்திருந்தது. பேருந்து நிலையத்தில் இருந்து அலிபிரி வரையிலும், அலிபிரியில் இருந்து திருமலை வரையிலும் தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிகாலை முதலே பேருந்து சேவை தொடங்கிய நிலையில் காலை 10 மணிக்கு திருமலைக்கு சென்று வர மொத்தம் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பிற்பகல் 2 மணியளவில் 2,100 பேருந்துகளாகவும், மாலை 6 மணியளவில் 3,790 பேருந்துகளாகவும் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட்டது. இது கடந்த 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் திருமலையில் 82 ஆயிரம் பக்தர்கள், திருப்பதியில் 38 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 1.30 லட்சம் பேர் கருட சேவை நிகழ்வை ஒட்டி சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதேசமயம் திருமலையில் உள்ள ஒட்டுமொத்த கேலரிகளிலும் சேர்த்து ஒரே சமயத்தில் 1.92 லட்சம் பேர் குவிந்தனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தேவஸ்தானம் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்திருந்தது. மலைப் பாதையில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த வெள்ளி முதலே இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

பிற வாகனங்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மொத்த பார்க்கிங் அளவான 12 ஆயிரம் ஹவுஸ் புல் ஆனது கவனிக்கத்தக்கது. திருமலையில் உணவு, குடிநீர் விநியோகம் ஆகியவற்றை தடையற்ற முறையில் அளிக்கும் வகையில் 1,500 ஸ்ரீவாரி சேவகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னதானக் குழுவினர் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர்.

பிரம்மோற்சவ விழாவை ஒட்டி தினசரி பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தற்போதைக்கு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வது சாத்தியம் இல்லை என்றே கூறுகின்றனர். தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவும் முடிந்துவிட்டதால் பக்தர்கள் அடுத்த சில வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.