புதுச்சேரி: துணை மின்நிலையங்களில் உள்ளே புகுந்த போராட்ட கும்பல் மின் இணைப்பினை துண்டித்ததால், ஒட்டுமொத்த புதுச்சேரியும்பல மணி நேரம் இருளில் மூழ்கியது. மின்துறை ஊழியர்களின் அடாவடி செயலால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மின்துறையை தனியார் மயமாக்க அரசு டெண்டரை வெளியிட்டுள்ளது. இதனைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கடந்த நான்கு நாட்களாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சதி அம்பலம்
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் புதுச்சேரி முழுவதும் மின் தடை ஏற்பட்ட நகரமே இருளில் மூழ்கியது.நெய்வேலியில் இருந்து மின்சாரம் தடையின்றி புதுச்சேரிக்கு வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக மின்சாரம் தடைப்பட்டது. சந்தேகமடைந்த மின்துறை தலைமை அதிகாரிகள் துணை மின்நிலையங்களை தொடர்பு கொண்டபோது, போராட்டக்குழுவினரின் சதி திட்டம் அம்பலமானது.போராட்ட கும்பல் பாகூர், வில்லியனுார், தொண்டமாநத்தம் துணை மின்நிலையங்களில் புகுந்து, அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, ஒட்டுமொத்த புதுச்சேரியும் ஸ்தம்பிக்கும் வகையில் மின் இணைப்பை துண்டித்தது தெரிய வந்தது.
ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் திக்குமுக்காடியது. ஆத்திரமடைந்த மக்கள், நகரில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
மின் தடை காரணமாக சிக்னல்கள் இயங்காததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. மக்கள் தாறுமாறாக புகுந்து சென்றனர். இதனால், பிரதான சாலை மட்டுமன்றி, உட்புற சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வியாபாரம் பாதிப்பு
ஆயுத பூஜைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி, மார்க்கெட்டுகளில் வியாபாரம் களை கட்டி வந்தது. மின் தடையால் ஒட்டுமொத்த வியாபாரமும் பாதித்தது.
ஏற்கனவே வெயிலை சமாளிக்க முடியாமல் திணறி வந்த மக்கள், இரவு நேர மின் தடையால் பெரும் அவதிக்குள்ளாகினர். வார விடுமுறையில் புதுச்சேரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
நள்ளிரவில் சீரமைப்பு
மின்துறை கண்காணிப்பாளர் சண்முகம், ஒவ்வொரு துணை மின்நிலையங்களுக்கும் நேரடியாக சென்று, துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகளை ஒப்பந்த ஊழியர்கள் மூலம் சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.இதனால், இரவு 8.30 மணிக்கு பிறகு படிப்படியாக மின்வினியோகம் துவங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு மேலும் மின் துண்டிப்பு சீரமைப்பு பணி முழு வீச்சில் நடந்தது.
பிராந்தியங்களிலும்’பவர் கட்’
இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள துணை மின் நிலையங்களில் புகுந்த மின் துறை ஊழியர்கள் அங்குள்ள ஒப்பந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு,மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.மாநிலத்தில் உள்ள 20 துணை மின் நிலையங்களிலும், ஒரே நேரத்தில் மின் இணைப்பு தண்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்மா சட்டம் பாயுமா?
போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதை தடுக்க மாநில அரசுகளுக்கு எஸ்மா சட்டம் கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது. 1981-ம் ஆண்டு மத்திய அரசு இந்த எஸ்மா சட்டத்தை (அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்) கொண்டு வந்தது.
இச்சட்டம், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்கிறது.மீறி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை ‘வாரண்ட்’ ஏதுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும், பணி நீக்கம் செய்திட மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்