வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் அவர்கள் 2022 செப்டம்பர் 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
அமைச்சரின் நியமனம் குறித்து தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவரது பதவிக்காலத்தில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் குறித்து தூதுவர் கலந்துரையாடினார். வியட்நாமும் இலங்கையும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அன்பான மற்றும் சுமூகமான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், பல துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது. 2022 ஜனவரியில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் 4வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் நடைபெற்றதை அமைச்சர் பாராட்டினார். இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையே அரசியல், சமூக, கலாச்சார மற்றும் கல்வித் துறைகளில் வலுவான ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 அக்டோபர் 02