ஜெய்ப்பூர்: கூட்டத்துக்கு தாமதம் ஆனதால் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு, ராஜஸ்தான், அபு ரோடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் வரும் வழியில் பல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பொதுகூட்ட நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. ஒலிபெருக்கி இல்லாமலேயே அவர் பேசினார். மோடி பேசும்போது, ‘‘இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியில் பேசுவது சரியாக இருக்காது என்று என் மனசாட்சி கூறுகிறது, எனவே உங்கள் முன்பு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நான் நிச்சயம் மீண்டும் இங்கு வருவேன், நீங்கள் எனக்கு காட்டிய அன்பையும் பாசத்தையும் வட்டியுடன் திருப்பித் தருவேன்’’ என்றார். மேடையில் மக்கள் முன் மோடி மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து ராஜஸ்தான் பாஜ தலைவர் சதீஷ் பூனியா கருத்து தெரிவிக்கையில் ‘‘குஜராத் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தின் எல்லையான ராஜஸ்தானில் தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது’’ என்றார்.
*இதெல்லாம் எங்ககிட்ட வேணாம்
மோடி மன்னிப்பு கேட்டது குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‘‘நான் எளிமையானவன் என்ற இமேஜ் உள்ளது என்பது அவருக்கு (மோடி) தெரியும். மூன்று முறை மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு நானும் கெலாட்டை போல் பணிவானவன் என்று காட்ட முயற்சிக்கிறீர்களா. இது போன்று செய்வதை விடுத்து, நாட்டு மக்களிடம் அன்பை காட்டுங்கள்’’ என்றார்.