எழுத்தாளர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மணிரத்னம் மூலம் திரைவடிவமாகியிருக்கிறது. பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு மணிரத்னத்துடன் இணைந்து ஜெயமோகனும், குமரவேலுவும் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். கடந்த 30ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். முதல் இரண்டு நாள்களில் 100 கோடி ரூபாய்க்கும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலையே வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் நகர்த்தி செல்லும். கதையில் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுடனும் வந்தியத்தேவன் சந்திப்பை நிகழ்த்துவார். அதுமட்டுமின்றி ஆதித்த கரிகாலனின் ஓலையை சுந்தர சோழருக்கும், குந்தவைக்கும் கொடுப்பதற்கு வந்தியத்தேவன் சோழ தேசத்திற்கு செல்வார். அங்கிருந்துதான் கதையும் ஆரம்பிக்கும். இப்படி வந்தியத்தேவன் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆசை என ரஜினியும், கமலும் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டிலும் பேசியிருந்தனர். மேலும், ஏற்கனவே பொன்னியின் செல்வனை தொடங்கலாம் என மணிரத்னம் வைத்திருந்த திட்டத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய்யிடம் பேசியதாகவும் ஏதோ காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது என்றும் பேச்சு இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் கார்த்தி தான் ஏற்ற வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறார். கொடுத்த வாய்ப்பிற்கு தன் நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்ற்னார். குறிப்பாக குறும்பும், அந்தக்கால ப்ளேபாய் தோரணைகளையும் கார்த்தி வெகு இயல்பாக தனது நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார் எனவும் புகழ்கின்றனர்.
Thank you #PS1 pic.twitter.com/BKUKScXfnf
— His Highness Vanthiyathevan (@Karthi_Offl) October 2, 2022
இந்நிலயில் நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “ விவரிப்பதற்கு வார்த்தையே இல்லை. பொன்னியின் செல்வன் கதையை எழுதிய கல்கி, அந்த கதையை இத்தனை ஆண்டுகளாக செதுக்கி இயக்கிய மணிரத்னம், பிரம்மாண்ட செட்கள் அமைத்த தோட்டா தரணி, இசையால் பிரம்மிக்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான். ரவிவர்மனின் ஒளிப்பதிவு, நடிகர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு என அனைத்துக்குமே நன்றி நன்றி நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.