அதிமுகவிற்குள் மீண்டும் நுழைய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சசிகலாவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன். இதுவரை அதிமுகவை கைப்பற்றுவோம் என கூறி வந்த டிடிவி தினகரன், இன்று தடாலடியாக அதிமுகவும், அமமுகவும் இணைய வேண்டிய அவசியமில்லை என கூறியிருக்கிறார். மேலும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டாம் என தான் கூறியதை சசிகலா கேட்கவில்லை எனத் தெரவித்துள்ள அவர், ஓபிஎஸ் கருத்தும் எனது கருத்தும் என கூறியிருக்கிறார்.
டிடிவி தினகரனின் இந்த பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி தான் தான் பொதுச்செயலாளர் என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ஒரு சிலரின் சுயநலம் , ஆணவம், அகங்காரத்தால் சொந்த கட்சிக் காரர்களையே விலைக்கு வாங்கும் அளவில் இயக்கம் தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தீர்ப்பளிக்கும் இல்லை என்றால் வரும் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் என்றார். ஓ.பி.எஸ் சட்டரீதியாக போராடி வருகிறார். ஓ.பி.எஸ் கருத்தும் எனது கருத்தும் ஒன்று தான் என்ற அவர், எடப்பாடி வீட்டிற்கு போலீஸ் போனால் பயந்துவிடுவார் என கூறினார். எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்தது தவறு என்று அப்போதே சசிகலாவிடம் சொன்னதாக கூறினார் டிடிவி தினகரன். மேலும், எடப்பாடி தொடை நடுங்கி என்றும் கடுமையாக விமர்சித்தார்.