செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடிவருகின்றனர். மேலும் ரியாலிட்டியோடும், வழக்கமான மன்னர் படங்களின் டெம்ப்ளேட்டுகளை மீறியும் ஒரு படம் வந்தது என்றால் அது தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் மட்டும்தாம். குறிப்பாக செல்வராகவனின் காட்சியமைப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்தின் முக்கியமான ப்ளஸ்கள்.
மேலும், அந்தப் படத்தில் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருந்தார். அவரது நடிப்பு படத்துக்கு மிகவும் பலமாக இருந்தது. இந்தச் சூழலில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டு உருவாவதை செல்வராகவன் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் தனுஷ் சோழ மன்னர் வேடத்தை ஏற்கவிருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படமானது 2024ஆம் ஆண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் செல்வராகவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நெறியாளர், ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது நாங்கள் கொண்டாடவில்லை அது எங்கள் தவறுதான். ஆனால் தற்போது கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். இதை பார்க்கும்போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த செல்வராகவன், “ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவனும். அந்தப் படம் வந்திருந்தபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்ச்யம் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள் என சென்றிருக்கும்” என்றார்.
தற்போது செல்வராகவனின் இந்தப் பேட்டி வைரலாகியுள்ளது. மேலும், அப்போதே படத்தை கொண்டாடியிருந்தால் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் இந்திய அளவில் எப்படி சென்று சேர்ந்ததோ அதைவிட அதிகம் ஆயிரத்தில் ஒருவன் சென்று சேர்ந்திருக்கும் எனவும் நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.