நான் சசிதரூர் கிட்ட பேசிட்டேன்… மல்லிகார்ஜுன கார்கே சொன்ன தகவல்!

வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும் நபரை தேர்வு செய்ய அகில இந்திய
காங்கிரஸ்
கட்சி தீவிரமாக தயாராகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவரப்படி, மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் என இருவர் மட்டும் போட்டியில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடந்து அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மூத்த தலைவர்கள் பலரும் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எப்படியிருந்தாலும் பின் வாங்கப் போவதில்லை என்று சசிதரூர் விடப்பிடியாக தெரிவித்து விட்டார். இதையடுத்து இருவரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டனர்.

காந்தி பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) முதல் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, நான் சசிதரூரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். கட்சி தலைவர் பதவிக்கு அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நபர் தான் வர வேண்டும்.

அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டதாக தெரிவித்தார். போட்டியிடுவதற்கான காரணம் குறித்து கேட்கையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாரும் போட்டியிடவில்லை. கட்சியின் சீனியர்கள் பலர் என்னை போட்டியிடுமாறு அறிவுறுத்தினர். இதன் காரணமாகவே போட்டியிடும் முடிவை எடுத்தேன்.

எனக்காக போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திற்காக போட்டியிடுகிறேன். வருங்கால இந்தியாவிற்காக போட்டியிடுகிறேன். மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளான இன்று எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளேன். நான் எதிர்க்கட்சி தலைவராக, அமைச்சராக, எம்.எல்.ஏவாக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்திருக்கிறேன்.

என்னுடைய இந்தப் பணியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கிறேன். என்னை தலித் முகமாக கருத வேண்டாம். நான் காங்கிரஸின் முகம். அக்கட்சியின் மதிப்புமிக்க தொண்டனாக போட்டியிடுகிறேன். இத்தகைய நிலைப்பாட்டிலேயே அரசியலில் தொடர்ந்து செயல்படுவேன் எனக் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.