டெல்லி: சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். உலகளாவிய விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு ஆகியவற்றால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை கணிசமாக குறையக்கூடும்.
சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது தற்போதுள்ள வரி விதிப்பு 2023 மார்ச் 31 வரை எந்த மாற்றமில்லாமல் நீடிக்கும்.
சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள் சோயா பீன் எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது பூஜ்யமாக உள்ளது. இருப்பினும் இந்த மூன்று வகையான சமையல் எண்ணெய்களுக்கு சுத்திகரிக்கப்படாத வகைகளுக்கான வேளாண் செஸ் மற்றும் சமூக நலத்திட்ட செஸ் 5.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.