‘தல’ பெயரை கேட்டவுடனே டென்ஷன் ஆன விஜய் சேதுபதி; லயோலா கல்லூரியில் சம்பவம்

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி தவிர்க்க முடியாத ஹீரோ. யாரின் துணையும் இன்றி தனியாக தன் திறமையின் மூலம் முன்னேறியவர். ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார். இதனால் அவர் கோலிவுட் மட்டுமின்றி வேற்று மொழி படங்களிலும் நடித்துவருகிறார். விஜய் சேதுபதியின் நடிப்புக்கு மட்டுமின்றி அவரது பேச்சுக்கும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியேகூட விஜய் சேதுபதியின் பார்வையையும், பேச்சையும் பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிலாகித்து பேசியிருந்தார். இப்படி அனைத்து வடிவங்களிலும் விஜய் சேதுபதி முழுமையாக இருக்கிறார்.

இந்நிலையில் லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது. எனக்கும் மதுப்பழக்கம் உண்டு. ஆனால், அது நல்லது அல்ல; உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது. மாணவர்கள் யாரும் அதனை முயற்சித்து அதில் மூழ்கிப்போக வேண்டாம். எனக்கும் இப்படி நிறைய பேர் நல்லது சொன்னார்கள். நான் எதையும் கேட்கவில்லை. ஆனால் இப்போது வருந்துகிறேன். நீங்களாவது கேளுங்கள்.

 

சோஷியல் மீடியாவில் சுதந்திரம் கொடுப்பதுபோல கொடுத்து உங்களை எல்லாம் அதில் வரவழைத்து உங்களது நேரத்தையும் காலத்தையும் அபகரிக்கிறார்கள். நீங்கள் அனைவரும் அதை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில், அது உங்களை வைத்து தனது வியாபாரத்தை ஜோராக நடத்தி வருகிறது. இதனால் சோஷியல் மீடியாவில் சண்டை போடுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக உங்கள் நேரத்தை செலவிடுங்கள்” என்றார்.

அதற்கு அடுத்ததாக திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். அப்போது அங்கிருந்த மாணவர்களில் சிலர், ‘தல, தல’ என கத்தினர். இதனைக் கேட்டு டென்ஷனான விஜய் சேதுபதி, “இப்போ நான் என்ன பேசிக்கொண்டு இருக்கிறேன். நீங்க ஏன் தலனு கத்துறீங்க” என்று கடிந்துகொண்டார்.தொடர்ந்து பேசிய அவர் தன் உரையை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.