கோவை: தனியார் காபி தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள சேரம்பாடி அத்திச்சொல் பகுதியில் மேத்யூ என்பவரின் காபி தோட்டத்தில் வைத்திருந்த சுருக்கு கம்பியில் சிறுத்தை ஒன்று மாட்டிக் கொண்டிருப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த உடனே, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பார்த்தபோது சுருக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தை ஆக்ரோஷம் மிகுந்து காணப்பட்டது .
ஆக்ரோஷத்துடன் இருந்த சிறுத்தையை பார்த்த உடனே வனத்துறையினர் உடனடியாக மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ குழு வரும் வரையில், வனத் துறையினர் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
பிறகு மருத்துவ குழுவினர் வந்தவுடன், அவர்களுடன் வனத்துறையினர் சிறுத்தையின் அருகே சென்று பார்த்தபோது, சிறுத்தையினுடைய உடல் சுருக்கு கம்பியால் மாட்டிருப்பது தெரியவந்தது. கம்பியில் மாட்டியதால் காயமடைந்து, வலியுடன் சீற்றத்துடன் இருந்த சிறுத்தையை மீட்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது.
நீண்ட நேரம் போராடிய வனத்துறையினர், மருத்துவக் குழுவினர் உதவியுடன் சிறுத்தையை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்பொழுது சிறுத்தை உடைய உடல்நிலை நன்றாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தனியார் காப்பி தோட்ட உரிமையாளர்கள் ஒருவர் தலைமறைவான நிலையில் மற்றொரு நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.