தமிழ் திரையுலகில் முன்னணி பிஆர்ஓக்களில் நிகில் முருகன் ஒருவர். அவர் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர். இப்படத்தில் மோகன், குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜீ மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அதில், படக்குழு உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்டஇயக்குனர் கே.பாக்யராஜ் பேசுகையில்,, “இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது என 15 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று நோட்டீஸும் அனுப்பியது. இதேபோல் நடிகர் உதயாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து நடிகர் சங்க விதி 13ன்படி பாக்யராஜும், நடிகர் உதயாவும் நீக்கப்பட்னர். பாக்யராஜ் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.