புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் சனிக்கிழமை மின்சாரம் தடைபட்டுள்ளது அதற்கு காரணம் மின்துறை ஊழியர்கள் என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் போராட்டக்குழு மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுபற்றி மின்துறை பொறியாளர் மற்றும் தொழிலாளர் தனியார்மய எதிர்ப்புப் போராட்டக்குழு பொதுச்செயலர் வேல்முருகன் இன்று கூறியதாவது: ”கடந்த இரண்டரை ஆண்டு காலமாக மின்துறை தனியார் மயத்துக்கு எதிராக போராட்டக் குழுவானது போராடிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை நாங்கள் வழங்கிக் கொண்டு எங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம்
இது போன்ற ஒரு சூழ்நிலையில் மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியானதில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மூன்று நாட்களுக்கு மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரியில் இல்லை.
அமைச்சர் நமச்சிவாயம் மீண்டும் புதுச்சேரி வந்தபிறகுதான் மின்சாரம் தடைபடுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால், எங்கள் மீது பழி சுமத்தி இப்போராட்டத்தை கலைக்க வேண்டும். எங்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தவேண்டும் என்று செயல்படுகிறார். முக்கியமாக மின்துறை தனியார் மயத்துக்கு எதிராக போராடும் எங்களுக்கு எதிராக மக்களை அமைச்சர் திசைதிருப்பி விடுகிறார்.
தனியார்மயத்தை கொண்டு வரும் அரசியல் உள்நோக்கத்தோடு எங்கள் மீது அமைச்சர் நமச்சிவாயம் பழிசுமத்தியுள்ளார். இந்த மின்தடைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவர்களே திட்டமிட்டு ஏற்படுத்தி இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.