தாய் மொழி ராஜஸ்தானியாக இருந்தாலும், சமஸ்கிருதத்தின் மீது கொண்ட மதிப்பால், விஜயபுராவில் தனது கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தானே சமஸ்கிருதம் சொல்லித்தருகிறார்.ராஜஸ்தானை சேர்ந்தவர் ராம்சிங், 55. இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் கர்நாடகாவின் விஜயபுராவிற்கு பிழைப்பு தேடி வந்தனர்.
விஜயபுரா மீனாட்சி சவுக்கில் துணி கடை துவக்கி, நடத்தி வருகின்றார். இக்கடையில் 60 முதல் 70 தொழிலாளர்கள் உள்ளனர். கடை உரிமையாளர், ஊழியர்களிடம் சமஸ்கிருதத்தில் பேசி வருகிறார்.புதிதாக இணையும் தொழிலாளர்களுக்கு, தினமும் அரை மணிநேரம் சமஸ்கிருதம் கற்றுத்தருகிறார். இதில், முஸ்லிம் மதத்தினரும் சமஸ்கிருதம் கற்கின்றனர்.இது குறித்து ராம்சிங் கூறியதாவது:18 ஆண்டுகளுக்கு முன், என் குடும்பத்தினருடன் சித்தேஸ்வரா மடத்திற்கு சென்றிருந்தோம். அங்கு சமஸ்கிருதத்தில் சுவாமிகள் உரையாற்றி கொண்டிருந்தார். இதை கேட்ட எனக்கு, இத்தகைய தெய்வீக மொழியை கற்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது.அன்று முதல் சமஸ்கிருத மொழியை கற்றேன். எங்கள் கடையில் புதிதாக சேரும் ஆணோ, பெண்ணோ, ஹிந்துவோ, கிறிஸ்டியனோ, அனைவருக்கும் நானே இலவசமாக சமஸ்கிருதம் கற்பிக்கிறேன். இதுவரை 10 முதல் 15 ஆயிரம் பேருக்கு சமஸ்கிருதம் கற்பித்துள்ளேன்.இதுபோன்று, கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லையான பாபலாடாவில் உள்ள இளைஞர்களுக்கும் சமஸ்கிருதம் கற்றுத்தருகிறேன்.ஜெர்மனி, அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், சமஸ்கிருதத்தை ஆவலுடன் கற்கின்றனர். இதை கற்க விரும்புவோர், 94497 68120 என்ற மொபைல் எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தாய்மொழி ராஜஸ்தானியாக இருந்தாலும், சமஸ்கிருதத்தின் மீது கொண்ட காதலால், மற்றவர்களுக்கும் கற்றுத்தரும் அவரின் எண்ணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement