சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து 57 ஆண்டு ஆகிறது; இன்று தர்மபுரி மாவட்டம் உதயமான நாள்: மக்களின் கடும் உழைப்பால் கல்வி, மருத்துவத்தில் முன்னேற்றம்

தர்மபுரி:  சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தர்மபுரி மாவட்டமாக உதயமான நாள் இன்று. 57 ஆண்டுகளில் சிறுதொழில்களில் வளர்ச்சியை நோக்கி மாவட்டம் சென்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் 1965ம் அக்டோபர் 2ம் தேதி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. பின்னர், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் 2004ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி பிரிக்கப்பட்டது. சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டது முதல் தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருந்தது. கடந்த 57 ஆண்டுகளாக விவசாயிகள், தொழில்துறையினர், மக்களின் கடுமையான உழைப்பால் தர்மபுரி தொழில்வளத்தில் முன்னேறி வருகிறது. முன்னேற்றம் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், மருத்துவம், கல்வியிலும் தர்மபுரி வளர்ச்சி அடைந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 10 ஒன்றியம், 10 பேரூராட்சி, 251 ஊராட்சிகள், 7 தாலுகா, 5 தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதி உள்ளது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் 15 லட்சத்து 6 ஆயிரத்து 843 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஆண்கள் 51 சதவீதமும், 49 சதவீதம் பெண்களும் உள்ளனர். மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 68.54 சதவீதமாகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 68 சதவீதமும், பெண்களின் கல்வியறிவு 53 சதவீதமாகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99 சதவீதத்தை விட குறைவானது. வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடக மாநிலத்தின் சாமராஜ்நகர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. மாவட்டம் முழுவதும், காடுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்பைடர் பள்ளத்தாக்கு பல காட்டு விலங்குகளின் தாயகமாகும். இம்மாவட்டம் யானைகளின் இடம்பெயர்வு பாதையில் வருகிறது. மனிதனுக்கும், யானைக்கும் இடையிலான மோதல்கள் இந்த பகுதிகளில் பொதுவானது. பல பழங்குடி சமூகங்களும் இந்த காடுகளை நம்பியுள்ளன.

சேர்வராயன் மலைத்தொடரின் மேலே உள்ள, வத்தல் மலை என்னும் குக்கிராமமானது, காபி மற்றும் பலாப்பழங்களை பயிரிடுவதற்கு, ஏற்ற சூழலை கொண்டுள்ளது. விவசாயம் மாவட்டத்தின் முக்கியமான தொழிலாக விளங்குகிறது. சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டம் மாநிலத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளுள் ஒன்றாகும். காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு, வாணியாறு, சின்னாறு, சனத்குமாரநதி, கம்பைநல்லூர் ஆறு, பாம்பாறு ஆகிய ஆறுகள் ஓடினாலும், குறிப்பிட்ட காலநிலைகளில் மட்டுமே, நீர்வரத்து அதிகம் இருக்கும் என்பதால், இம்மாவட்டம் அதிக நாட்களில் வறட்சியைச் சந்திக்கின்றன. தர்மபுரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் எராளமானோர் போட்டி தேர்வுகள் எழுதி அரசு வேலைகளில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் அரசு வேலைக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களும் அதிகமானோர் உள்ளனர். இதுகுறித்து சமூக மேம்பாட்டாளர்கள் கூறியதாவது: கல்வித்துறையில் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, 5 அரசு கலைக்கல்லூரிகள், 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ, மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் பிரபல தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. இதனால் பல மாவட்ட மாணவர்கள் தர்மபுரியில் தங்கியிருந்து படிக்கின்றனர். ஒருகாலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களூர், சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்வார்கள். ஆனால் தற்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அருகாமையில் உள்ள மாவட்டங்களிருந்து மக்கள் தர்மபுரியில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தர்மபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. தர்மபுரி நாளான இன்று, தர்மபுரி மக்கள் அனைவரும் நம் மாவட்டத்தை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உறுதியேற்போம், என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.