களங்கத்தை போக்க உருவான ஏரி| Dinamalar

தாவணகரே மாவட்டத்தில், வருண பகவான் ஆர்ப்பரித்ததில் பத்ரா உட்பட, பல்வேறு ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி என பிரசித்தி பெற்ற சூளகரே ஏரி நிரம்பி வழிகிறது. இந்த ஏரியின் பின்னணியில், சுவாரஸ்யமான கதை உள்ளது.தாவணகரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவில், சூளகரே ஏரி கரையை தாண்டி வெளியே தண்ணீர் பாய்கிறது. சுற்றுப்பகுதிகளில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது. இந்த அழகான காட்சியை பார்க்க, சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் குவிகின்றனர்.

ஏரியில் நீச்சலடித்து மகிழ்கின்றனர். நீச்சல் தெரியாத இளைஞர்கள், இளம் பெண்கள், மூத்த குடிமக்கள் தொலைவில் நின்று ஏரியை ரசிக்கின்றனர்.இந்த பாதையில் யார் சென்றாலும், இந்த ஏரியை பார்க்காமல் செல்வதில்லை. ஏரி எதிரே நின்று பார்த்தால், சுற்றிலும் மலை, குன்றுகள், பாலம், பச்சை பசேலென்ற வயல் வெளி தென்படும். விவசாயிகளின் உயிர்நாடியான ஏரி, முக்கியமான சுற்றுலா தலமாகும். வார இறுதி நாட்களில், பெங்களூரு, ஷிவமொகா, சித்ரதுர்கா, தாவணகரே உட்பட பல்வேறு இடங்களிலிருந்து, பலரும் குடும்பத்துடன், நண்பர்களுடன் இங்கு வருகின்றனர்.ஏரியின் சுற்றளவு, 65 கி.மீ., இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இதன் அகலம் ஒரு பக்கம் 60 அடி, மற்றொரு பக்கம் 80 அடி உள்ளன. இதன் ஆழம் 27 அடி. சுற்றுப்புறத்தின் நுாற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து, பாய்ந்து வரும் மழைநீர் ஏரியில் சேர்கிறது. 12ம் நுாற்றாண்டில் உருவான இந்த ஏரி, சென்னகிரியிலிருந்து, தாவணகரேவுக்கு செல்லும் பாதையில், எட்டு கி.மீ., தொலைவில் உள்ளது.பழைய மைசூரு ராஜ்யத்தின், பிரிட்டிஷ் பொறியாளர் சாங்கி என்பவர்,

இந்த பகுதியில் ஏரி அமைப்பது சரியாக இருக்காது என்றார். ஆனால் அன்றைய நீர்ப்பாசன வல்லுனர்கள், சாதுர்யமாக ஏரி அமைத்தனர். இதை கண்டு சாங்கி ஆச்சர்யப்பட்டார். ஏரியின் அக்கம், பக்கம் இரண்டு கால்வாய்கள் உள்ளன. இவற்றின் வழியாக, தண்ணீர் பாய்ந்து வருகிறது.சூளகரே ஏரி அமைத்ததன் பின்னணியில், ஒரு ஆச்சரியமான விஷயமும் உள்ளது. இந்த பகுதியில் ஸ்வர்கவதி என்ற பட்டணம் (தற்போது ககத்துார் கிராமமாக உள்ளது) இருந்ததாக, வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஆட்சி நடத்திய விக்ரமராயா, இவரது மனைவி நுாதனா தேவிக்கு, சாந்தலா தேவி என்ற ஒரே மகள் இருந்தாள். இவரை அனைவரும் சாந்தம்மா என்றே அழைத்தனர்.இவர் பருவ வயதை எட்டியதும், தந்தையின் அனுமதி பெறாமல் பக்கத்து ஊருக்கு சென்றார். அங்கு சித்தேஸ்ரா என்ற இளைஞரை காந்தர்வ மணம் புரிந்தார். இதனால் கோபமடைந்த தந்தை, மகளை நடத்தை கெட்டவள், வேசி என கடுமையான வார்த்தைகளால் திட்டினார். பட்டணத்தின் மக்களும் திட்டினர். மனம் நொந்த சாந்தம்மா, நடத்தை கெட்டவள் என்ற களங்கத்தை போக்க, ஏரி அமைக்க வேண்டும் என, சபதம் செய்தார்.ஸ்வர்கவதி பட்டணத்தில், வேசிகள் வசித்து வந்த பகுதி, ஏரி அமைக்க தகுதியான இடம் என முடிவு செய்தார். அந்த இடத்தை விட்டுத்தரும்படி, வேசிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர்களும் ஒரு நிபந்தனை விதித்து, இடத்தை விட்டுக்கொடுக்க சம்மதித்தனர். ஏரிக்கு சூளகரே, என பெயர் சூட்ட வேண்டும் என்பதே, அவர்களின் நிபந்தனையாக இருந்தது. ‘சூளே’ என்றால் கன்னடத்தில் ‘வேசி’ என அர்த்தம்.இதற்கு ஒப்புக்கொண்ட இளவரசி சாந்தம்மா, கணவருடன் சேர்ந்து பெரிய ஏரி அமைத்தார். சூளகரே என பெயரும் சூட்டினார். தனக்கு ஏற்பட்ட களங்கம் விலக வேண்டும் என வேண்டி, அதே ஏரியில் குதித்து உயிர் துறந்தார். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல், அருகில் உள்ள மலையிலிருந்து குதித்து, சித்தேஸ்வரா தற்கொலை செய்து கொண்டார். மலை மீது இப்போதும் சித்தேஸ்ரா கோவில் உள்ளதை காணலாம். இவரை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் இங்கு திருவிழா நடக்கிறது.அன்றிலிருந்து இன்று வரை, சூளகரே என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள், இப்போதும் வேசியரை பரிசுத்தமான மனம் கொண்டவர்களாக கருதுகின்றனர்.

சித்ரதுர்கா நகருக்கு, இந்த ஏரியிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள், இதை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். ஏரிக்கு பெயரை சாந்தி சாகரா என பெயர் சூட்டும்படி, சிலர் கூறினர். இதற்கு அன்றைய முதல்வர் ஜெ.எச்.படேல் சம்மதிக்கவில்லை. சாந்தம்மா ஒரு பெண். அவர் அமைத்த ஏரி, லட்சக்கணக்கான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்படுகிறது. எனவே இதே பெயரில் இருக்க வேண்டும் என விரும்பினார். அரசு ஆவணங்களில், ‘சாந்தி சாகரா’ என குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், மக்கள் இதை ‘சூளகரே’ என்றே இன்றைக்கும் அழைக்கின்றனர்.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.