தாய்க்கு கஷ்டம் தராமல் இருக்க வீட்டைவிட்டு ஓட்டம்; 4 வருடத்துக்கு பின் மகனை மீட்டு தாயிடம் ஒப்படைத்த போலீசா:ர் திருப்புவனம் அருகே நெகிழ்ச்சி

திருப்புவனம்: காணாமல்போன சிறுவனை 4 வருடங்களுக்கு பிறகு போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்  அருகே வடுகன்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி தமிழ்செல்வி (40). இவர்களுக்கு 2001ல் திருமணம் நடந்தது. மகன் பிறந்த சில மாதங்களில் கணவர் மாயமாகிவிட்டார். ஒரே மகன் ஹரிஹரசுதனுடன் தமிழ்செல்வி பெற்றோருடன் வசித்து வந்தார். தனியார் மில்லில் கூலி வேலை செய்து மகனை வளர்த்து வந்தார். 10ம் வகுப்பில் 450 மதிப்பெண்ணிற்கு மேல் வாங்கிய ஹரிஹரசுதன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 3.12.2018ல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருப்புவனம் போலீசில் தமிழ்செல்வி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரிஹரசுதனின் செல்போன் எண்ணை கண்காணித்தனர்.

இதில் அவனது செல்போன் திருவனந்தபுரம் அருகில் செயல்பாட்டில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு விரைந்தனர். ஆனால் செல்போனை விற்றுவிட்டு சிறுவன் அங்கிருந்து மாயமானது தெரியவந்தது. சிவகங்கை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஊட்டி குன்னூரில் உள்ள ஓட்டலில் சிறுவன் வேலை செய்து வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குன்னூர் விரைந்த சிறப்பு தனிப்படை போலீசார் சிறுவனை மீட்டு திருப்புவனத்திற்கு அழைத்து வந்தனர். 4 வருடமாக மகனை காணாமல் பரிதவித்த தாயிடம் அவனை ஒப்படைத்தனர். மகனை கட்டியணைத்து தாய் கண்ணீர் வடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணையில், சிறுவனுக்கு இதய கோளாறு இருந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளான். தந்தையும் இல்லாத நிலையில் தாயார் தனக்காக சிரமப்படுவதை எண்ணியே சிறுவன்  வீட்டை விட்டு வெளியேறி உள்ளான்.  மதுரையில் இருந்து திருவனந்தபுரம், குருவாயூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றிய சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் குன்னூர் வந்துள்ளான். போலீஸ்காரர் ராஜேஸ்வரன் சிறுவன் பற்றிய தகவல்களை ஒவ்வொரு தாலுகா போலீஸ் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டுள்ளார். முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிலும் பதிவிட்டதை கண்டு குன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலை அடுத்து போலீசார் சிறுவனை மீட்டு வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.