இலக்கு 55,000 ஹெக்டேர்; இயன்றது 12 ஆயிரம் ஹெக்டேர் – நெல்லையில் குறையும் வேளாண் பரப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு வேளாண் பரப்பு குறைந்து வருகிறது. 799 குளங்களில் தண்ணீர் இல்லை என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.8 மி.மீ. கடந்த ஆண்டு 12 மாதங்களிலும் இயல்பைவிட அதிகமாக 1,475 மி.மீ. மழை பெய்திருந்தது.

2020-ம் ஆண்டில் இயல்பைவிட குறைவாக 716 மி.மீ. மழை பெய்திருந்தது. இவ்வாண்டு இதுவரை 342.52 மி.மீ. மழை பெய்துள்ளது. செப்டம்பர் மாத இயல்பான மழையளவு 30.20 மி.மீ.. அதில் இதுவரை 25.03 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 5 சதவீதம் குறைவு.

அணைகள் நிலவரம்: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ள ளவு 12,882 மில்லியன் கனஅடி.

தற்போது 4872.46 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 3998.18 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. அணைகளில் கடந்த ஆண்டைவிட தற்போது நீர் இருப்பு அதிகமாக உள்ளது. அணைகளில் தற்போது 37.82 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 31.04 சதவீதம் தண்ணீர் இருந்தது. 6 அணைகளிலும் தற்போதைய நீர்மட்டம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம்): பாபநாசம்- 88.60 அடி (85.30 அடி), சேர்வலாறு- 93.31 (100.20), மணிமுத்தாறு- 73.20 (63.25), வடக்கு பச்சையாறு- 13.25 (16.65), நம்பியாறு- 12.49 (10.63), கொடுமுடியாறு- 43.50 (5.50).

மாவட்டத்தில் 692 கால்வரத்து குளங்கள், 404 மானாவாரி குளங்கள் என, மொத்தம் 1,096 குளங்கள் உள்ளன. இதில் 454 கால்வரத்து குளங்களும், 345 மானாவாரி குளங்களும் என, மொத்தம் 799 குளங்கள் வறண்டுள்ளன. தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குளங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 70 சதவீத குளங்கள் வறண்டுள்ளன.

பயிர் சாகுபடி: மாவட்டத்தில் கார் பருவத்தில் 7,700 ஹெக்டேர், பிசான பருவத்தில் 27,200 ஹெக்டேர், கோடை பருவத்தில் 8,100 ஹெக்டேர் என, மொத்தம் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் தற்போதுவரை 10,051 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 500 ஹெக்டேர் பரப்பு அதிகமாக நெல் சாகுபடி நடைபெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 14,597 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இதுபோல் 11, 200 ஹெக்டேரில் பயறுவகை பயிர்கள் சாகுபடி இலக்கில் இதுவரை 1,245 ஹெக்டேரும், 1,821 ஹெக்டேர் சிறுதானியங்கள் சாகுபடி இலக்கில் இதுவரை 163 ஹெக்டேரிலும், 1,500 ஹெக்டேர் எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடி இலக்கில் இதுவரை 145 ஹெக்டேரிலும், 800 ஹெக்டேர் பருத்தி சாகுபடியில் 624 ஹெக்டேரிலும், 50 ஹெக்டேர் கரும்பு சாகுபடி இலக்கில் 24 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

மொத்தமாக மாவட்டத்தில் 55,371 ஹெக்டேரில் பலவகை பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 12,252 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இதேகால த்தில் 16,945 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றிருந்ததாக வேளா ண்மைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.