காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற ஆவலுக்கு விடையாக, வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே, கே.என்.திரிபாதி ஆகியோர் தங்கள் பெயரைப் பதிவு செய்தனர். இதில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், ராஜஸ்தான் அரசியலில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக முதல்வர் அசோக் கெலாட் தேர்தலிருந்து பின்வாங்கிக்கொண்டார்.
அதோடு மூத்த தலைவர் திக்விஜய சிங்கும், மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றதும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இதனால் கட்சியில் தற்போது சசி தரூருக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையில் நேரடியாகவே போட்டி நிலவுகிறது. அதோடு கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், “மல்லிகார்ஜுன கார்கேவால் கட்சியில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது” என்பதாக சசி தரூர் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
நாக்பூரில் இன்று மல்லிகார்ஜுன கார்கேவுடனான போட்டி குறித்து பேசிய சசி தரூர், “நாங்கள் எதிரிகள் அல்ல, இது போரும் அல்ல. இது கட்சியின் எதிர்காலத்துக்கான தேர்தல். மேலும், காங்கிரஸ் கட்சியின் முதல் மூன்று தலைவர்களின் பட்டியலில் மல்லிகார்ஜுன கார்கே இருக்கிறார். ஆனால், இவரைப் போன்ற தலைவர்களால் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. மேலும் இவர்கள் கட்சியில் தற்போதுள்ள அமைப்பையே தொடர்வார்கள். அதேசமயம் நான், கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாற்றத்தைக் கொண்டு வருவேன்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, மூத்த தலைவர்கள் மற்றும் இளம் தலைவர்கள் வலியுறுத்தியதாலே தேர்தலில் நுழைந்ததாகக் கூறிய மல்லிகார்ஜுன கார்கே, யாரையும் எதிர்த்துத் தேர்தலில் இறங்கவில்லை என்றும், கட்சியைப் பலப்படுத்துவதற்காகவே போட்டியிடுவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.