புதுச்சேரி: ஐந்து நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தவறியனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்ட குழுவிற்கு இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சோரி மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் துணை மின் நிலையங்களில் புகுந்த போராட்ட கும்பல், மின் இணைப்புகளை துண்டித்ததால் மாநிலமே இருளில் மூழ்கியது.
ஆத்திரமடைந்த மக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொடர்ந்து அவசரமாக களம் இறங்கிய, மின் துறை நள்ளிரவு முழுவதும் பணியாற்றி மின் இணைப்புகளை சரி செய்தனர். இப்பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஐந்தாம் நாளான நேற்றும் மின் துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்ததால் கிராமப்பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. இதனைக் கண்டித்து வில்லியனுார், ஒதியம்பட்டு, ஆரியப்பாளையம், சிலுக்காரிபாளையம், உளவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மின்வினியோகம் பாதிக்காமல் இருக்க, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஓய்வு பெற்ற மின் ஊழியர்களையும் பணிக்கு வர அழைப்பு விட்டுள்ளனர்.அசாதாரண சூழலை தொடர்ந்து துணை மின்நிலையங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஒரு கம்பெனி மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் நேற்று பல குழுக்களாக பிரிந்து புதுச்சேரி நகரப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், மறைமலையடிகள் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினர். துணை மின் நிலையங்களில் ஆயுதம் தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அரசின் அவசர அழைப்பை ஏற்று, புதுச்சேரிக்கு வந்துள்ள மத்திய பவர் கிரீடு அதிகாரிகள் 24 பேர், துணை மின்நிலையங்களின் தானியங்கி பகுதிகளை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மின் துறை எச்சரிக்கை
மின் துண்டிப்பு சம்பவத்தை தொடர்ந்து மின் துறை அதிரடியாக களம் இறங்கியுள்ளது. மின் துறை ஒருங்கிணைந்த போராட்ட குழுவிற்கு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்துறை செயலர் அருண் அனுப்பியுள்ள நோட்டீஸ்:
துணைமின் நிலையங்களில் மின் இணைப்பு துண்டித்ததால் கடந்த 1 ம் தேதி புதுச்சேரி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. ஊழியர்களின் இச்செயல் சட்டப்படி தண்டனைக்குரியது. மின் துறை என்பது மக்களின் சேவைக்கானது. பொதுமக்களின் சேவையை பாதிக்கும் மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது.
மின் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம் -1947 படி சட்ட விரோதமானது. எனவே ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐந்து நாட்கள் மின் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், இன்று 3 ம் தேதிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மின் துறை தயாராகி வருகிறது.முதற்கட்டமாக தொழிலாளர் தகராறுகள் சட்டத்தின் கீழும், அடுத்து எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்