ராஜ்கோட்,
இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியா-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆட களம் இறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் பேட்ஸ்மன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
முதல் இன்னிங்சில் அந்த அணி 98 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அபாரமாக ஆடியது.
இறுதியில் அந்த அணி 110 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 374 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 138 ரன்னும், கேப்டன் விஹாரி 82 ரன்னும், சவுர்ப் குமார் 55 ரன்னும் குவித்தனர். சவுராஷ்டிரா அணி தரப்பில் சேத்தன் சக்காரியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் சிராக் ஜானி 3 ரன்னுடனும், தர்மேந்திர சிங் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். சவுராஷ்டிரா அணி இன்னும் 227 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.