ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் பசு பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு ரூ.40 வழங்கப்படும்- அரவிந்த் கெஜ்ரிவால்

ராஜ்கோட்,

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் கொடி நாட்ட துடிக்கும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

அந்தவகையில் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்-மந்திரி பகவந்த் சிங் மானுடன் குஜராத்தில் நேற்று ஆம் ஆத்மியினரை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார். பின்னர் ராஜ்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி குஜராத்துக்கு சமீபத்தில் அறிவித்த ரூ.20 ஆயிரம் கோடி தொகுப்பு வெறும் ஒப்பந்ததாரர்களுக்கும், மந்திரிகளுக்கும் மட்டுமே பயனளிக்கும். பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. குஜராத் மக்கள் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, மின்கட்டண குறைப்பு, தண்ணீர், பணவீக்கத்தில் இருந்து விடுதலை போன்றவற்றை விரும்புகிறார்கள். இவற்றை நாங்கள் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் செய்துள்ளோம். அதையே குஜராத்திலும் செயல்படுத்துவோம்.

டெல்லியில் பசு ஒன்றுக்கு பராமரிப்புக்காக நாள்தோறும் ரூ.40 வழங்கி வருகிறோம். இதில் ரூ.20 டெல்லி அரசும், ரூ.20 மாநகராட்சி நிர்வாகமும் வழங்குகின்றன. குஜராத்தில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியமைத்தால், அங்கும் பசு பராமரிப்புக்காக நாள்தோறும் ரூ.40 வழங்குவோம்.

பால் கறக்காத பசுக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்காக பராமரிப்பு கொட்டகைகள் அமைக்கப்படும். மாநிலத்தில் பசுக்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும்.

குஜராத்தில் இன்று தேர்தல் நடத்தப்பட்டால் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் என உறவுத்துறை அறிக்கை வந்திருப்பதாக நான் அறிந்தேன். அந்த அறிக்கை வெளியனாதில் இருந்து காங்கிரசும், பா.ஜனதாவும் மறைமுக கூட்டணி அமைத்து ஆம் ஆத்மியை வீழ்த்த முயற்சிக்கின்றன. இந்த அறிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள பா.ஜனதா, காங்கிரசுடன் ரகசிய கூட்டங்களை நடத்தி உள்ளது. ஆம் ஆத்மியை தோற்கடிக்க இரு கட்சிகளும் ஒரே மொழியை பயன்படுத்துகின்றன. பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா பலப்படுத்த முயற்சிக்கிறது. ஆம் ஆத்மி ஓட்டுகளை பிரிக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

சில காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதாவில் இணைய முன்வந்தனர். ஆனால் அவர்களை காங்கிரசிலேயே தொடருமாறு கூறி அந்த கட்சியை வலுப்படுத்துகின்றனர்

குஜராத்தில் 10 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெறுபவர்களும் பின்னாளில் பா.ஜனதாவுக்கு சென்று விடுவார்கள். எனவே காங்கிரசுக்கு வாக்களிப்பது வீண் வேலை.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிதியுதவியை அளிக்காததால் மாநில அரசுக்கு எதிராக அந்த மையங்களின் உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்த சூழலில் பசு பாதுகாப்பு தொடர்பாக கெஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.