கொட்டும் மழையில் ராகுல் செய்த தரமான சம்பவம்… திருப்புமுனை ஏற்படுத்துமா மைசூரு?

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த முடியுமா? என்பது தான் பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம் என்று சொல்லப்படும் நிலையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை அளித்து வருகிறது. இருப்பினும் காங்கிரஸை தூக்கி நிறுத்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ்
இனிமேல் அவ்வளவு தான் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கையில் புது ரத்தம் பாய்ச்ச இந்திய ஒற்றுமை பயணத்தை (Bharat Jodo yatra) கன்னியாகுமரியில் தொடங்கி பேசுபொருளாக மாற்றினார் ராகுல் காந்தி. இது காங்கிரஸிற்கு மட்டுமின்றி ராகுலின் அரசியல் வாழ்விலும் திருப்புமுனையாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்நிலையில் இந்த யாத்திரையின் போது கொட்டும் மழையில் விடாமல் பேசி அசரடித்துள்ளார் ராகுல் காந்தி.

இந்த ஒற்றை செயலால் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? என்று டெல்லியில் குவிந்திருந்த நாட்டு மக்களின் கவனம், தற்போது மைசூரு பக்கம் திரும்பியுள்ளது. மைசூருவில் இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒருபகுதி நேற்று மாலை நிறைவடைந்தது. இதையடுத்து பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென கனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.

ஆனாலும் பொதுக்கூட்டத்தை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ ராகுல் காந்தி விரும்பவில்லை. நான் பேசுகிறேன். கேளுங்கள் என்று உரையாற்றத் தொடங்கிவிட்டார். ”கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை காஷ்மீர் வரை விடாமல் தொடரும். இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மழையால் எங்கள் யாத்திரையை நிறுத்த முடியாது. வெயிலோ, புயலோ, பனியோ எதுவாக இருந்தாலும் சரி.

இந்திய ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறும். எங்கள் பயணத்தில் வெறுப்பையோ, வன்முறையையோ ஒருபோதும் பார்க்க முடியாது. அன்பு, சகோதரத்துவம் என இவற்றை தான் பார்க்கலாம். இதைத் தான் இந்திய வரலாறும் சொல்கிறது. நமது டி.என்.ஏவிலும் இவை தான் இருக்கின்றன. பாஜக பரப்பி வரும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை எங்களின் இந்த யாத்திரை முடிவுக்கு கொண்டு வரும்.

அதுமட்டுமின்றி நாட்டு மக்களை ஒன்று திரட்டி ஒரே குடையின் கீழ் நிற்க வைக்கும். பாஜகவை விரட்டி அடிப்போம். இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் மலரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மைசூருவில் ராகுலின் இந்த பேச்சு தான் நாடு முழுவதும் எதிரொலித்து வருவதாக காங்கிரஸ் தொண்டர்கள் பேசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.