திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்றைய தினம் (02) வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நவராத்திரி விரதமும் மகாத்மா காந்தியின் பிறந்த தினமும் ஒருங்கே அமையப்பெற்ற இன்றைய நன்னாளில் திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஸ்தலமான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற காலைப்பூஜை மற்றும் வழிபாடுகளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டார்.
இலங்கை -இந்திய மக்களின் செழுமை, அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அவர் பிரார்த்தித்தமை குறிப்பிடத்தக்கது. அமைதிநிறைந்த கடலோரத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு இச்சிவாலயத்தின் வரலாறு குறித்து உயர் ஸ்தானிகருக்கு கூறப்பட்டது.
இந்தியாவைச்சேர்ந்த பக்தர்கள் மத்தியிலும் இந்த ஆலயம் மிகவும் பிரபலமானதாக இருக்கும் அதேவேளை 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் அவரது தேவாரங்களில் போற்றிப் பாடப்பெற்ற இலங்கையின் இரு ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இதேபோல பாடல்பெற்ற பெருமைக்குரிய மற்றொரு தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் இந்தியாவின் ஆதரவின்கீழ் புனருத்தாரணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
17 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் அழிக்கப்படுவதற்கு முன்னரான இடைக்காலத்தில் இலங்கையின் பல்வேறு ஆட்சியாளர்களாலும் வழங்கப்பட்ட ஆதரவு தொடர்பாக ஆலய அறங்காவலர் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் ஆன்மீகச் சுற்றுலாவினை மேம்படுத்திம் நோக்குடன் இந்த ஆலயத்தை புனரமைப்பு செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.