உ.பி.யில் நவராத்திரி துர்கா பூஜை விழாவில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப பலி.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

பதோஹி: உத்திரப்பிரதேசத்தின் பதோஹியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு, நவராத்திரி செப்டம்பர் 26ம் தொடங்கி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் முக்கிய நிகழ்வாக துர்கா பூஜை பண்டிகை நேற்று நாட்டின் வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில்  அமைக்கப்பட்டிருந்த துர்கா பந்தலில் இரவு 9:30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 300 பேர் இருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இருப்பினும் விழா பந்தலில் ஏற்பட்ட தீ மளமளவென பரவிய நிலையில், பலரின் உடலிலும் தீப்பற்றியது.

இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக அவசர சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.