திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு அவரை ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா, கலெக்டர் வெங்கடரமணா, இணை கலெக்டர் பாலாஜி, சித்தூர் மாவட்ட முதன்மை நீதிபதி பீமாராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, தலைமை செயல் அதிகாரி தர்மா ஆகியோர் அவரை சுவாமி தரிசனம் செய்து வைத்து லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். முன்னதாக, கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கினார்.
தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் குடும்பத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், தற்போது நடைபெற்று வரும் பிரமோற்சவத்திலும் குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர், நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார். அவரை கோயில் அதிகாரிகள் சம்பிரதாய முறைப்படி வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
திருப்பதியில் 2 நாள் சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி புறப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் கே.வெங்கட ரமணா ரெட்டி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.