இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ராகுல் காந்தி. குமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணமாக செல்லவிருக்கிறார். வழிநெடுகிலும் மக்களை சந்தித்து பேசவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவும், செய்தியாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபயணத்திற்கு இடையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆனால் எதற்கும் கலங்காத ராகுல் மழையில் நனைந்தபடியே அதிரடியாக பேசினார். ”எங்கள் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மழையோ, வெயிலோ, புயலோ, பனியோ எதுவாக இருந்தாலும் சரி. அப்படித்தான் பாஜகவின் வெறுப்புணர்வும், வன்முறையும். அதையும் முடிவுக்கு கொண்டு வருவோம். இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சு தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுவும் மழையில் நனைந்து கொண்டே பேசிய பராக் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள், வீடியோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தம்பிகளோ
மழையில் பேசிய வீடியோவை பகிர்ந்து அதிரடி காட்டி வருகின்றனர்.
பலமுறை மழையில் நனைந்து சீமான் பேசியிருந்தாலும் சென்னையில் 2017 ஜூலை மாதம் 29ஆம் தேதி அப்துல் கலாம் நினைவு பொதுக்கூட்ட மேடையில் பேசியதை யாராலும் மறக்க முடியாது. முதல்முறை பெரிய அளவில் வைரலாகி மாநில அளவில் கவனம் பெற்ற கூட்டமாக மாறியது. மழை என்றால் சாரல் மழையோ, விட்டு விட்டோ மழையோ பெய்யவில்லை. அடை மழை கொட்டித் தீர்த்தது.
அதை கேட்பதற்காக வந்திருந்த தொண்டர்களும் அப்படியே தங்கள் இருக்கைகளில் சிறிதும் நகராமல் அமர்ந்திருந்தனர். குடை இல்லை. மழையில் நனையாமல் இருக்க துண்டுகளோ, பிளாஸ்டிக் கவர்களோ இல்லை. ஒட்டுமொத்த கூட்டமும் நனைந்து கொண்டே உரையை கேட்டது. வழக்கமாக சீமானின் பேச்சில் அனல் பறக்கும். அன்றைய தினமும் அப்படித்தான். தீப்பொறி பறந்ததாக நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் பெருமிதம் அடைந்து வருகின்றனர்.
மைசூருவில் ராகுலின் பேச்சை காங்கிரஸார் கொட்டும் மழையில் அமைதியாக தான் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் சென்னையில் நடந்த கூட்டத்தில் சீமானின் பேச்சை அப்படி சாதாரணமாக யாரும் கடந்து செல்லவில்லை. கைதட்டல்கள், ஆரவாரம், விசில் சத்தம் என அதகளம் செய்துவிட்டனர். இதைச் சுட்டிக் காட்டி சீமான் அன்றே மழையில் பாலிடிக்ஸ் செய்து காட்டிவிட்டார். நீங்கள் தான் ரொம்ப லேட் ராகுல் காந்தி என்று பதிவிட்டு வருகின்றனர்.