கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் இதற்கு முன்பு வேறெந்த படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு பொன்னியின் செல்வன் மீது ஏற்பட்டிருந்தது. அதற்கு காரணமாக, பலராலும் வாசிக்கப்பட்ட நாவல், பெரிய நடிகர்கள் நடித்திருந்தது, வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இப்படி பலவற்றை சொல்லலாம்.
பெரும்பாலானோர் முதல் நாள் முதல் ஷோ பார்த்து விட்டு அதனை பெருமைபொங்க பதிவிட்டும் வந்தனர். இவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வனை படித்திருப்பார்களா? படமோ, அதன் கதையோ அவர்களுக்குப் புரிந்திருக்குமா? சோழர்களின் வரலாற்றை படித்திருப்பார்களா? என தெரியவில்லை. நமது ஊரில் சினிமாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம், மோகம் என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. சினிமாத்துறையில் இருப்போரைப் பற்றி நாம் இங்கு பேசவேண்டியதில்லை. அவர்களின் ஆர்வம் இயல்பானது. ஆனால், ஐந்து ஆண்டுகள் நம்மை ஆளக்கூடியவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கக் கூட காட்டாத ஆர்வம், சினிமா மீது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. எதிர்காலங்களில் இதுபோன்ற மெகா படங்கள் ரிலீசாகும் போது இதே மனநிலை வரும் என்பதும், படம் பார்க்காத மற்றவர்களை ஒரு விதமான அழுத்தத்திற்கு அது தள்ளிவிடும் என்பதும் வருத்தத்திற்குரிய விஷயம்.
இதுஒருபுறமிருக்க சமூக வலைதளங்கள் முழுவதும் பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சுக்கள்தான் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படம் வரவேற்பை பெற்றுத் தந்தாலும், கடுமையான விமர்சனங்களும் அந்த படத்தின் மீது முன்வைக்கப்படுகின்றன. பற்றாக்குறைக்கு தெலுங்கு ரசிகர்கள், பாகுபலி உள்ளிட்ட தெலுங்கு படத்துடன் பொன்னியின் செல்வனை ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள். அவர்களாவது பக்கத்து மாநிலம், வேறு மொழிக்காரர்கள் என்று விட்டு விடலாம். தமிழ் ரசிகர்களும் கூட பொன்னியின் செல்வன் மீது வன்மத்தை கக்கி வருகிறார்கள். ஒரு சிலர் தெலுங்கு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தும் வருகிறார்கள். இனிமேல் தெலுங்கு பட ப்ரோமோஷனுக்கு இங்கு வந்து விடாதீர்கள்; இனிமே தெலுங்கு படங்கள் இங்கு வெற்றி பெறாது என்று காட்டமாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
உண்மையில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலே கூட, எப்போதும் வரலாற்று ஆர்வலர்களுடன் ஒரு மோதல் போக்கையே கொண்டு வருகிறது. பொதுவாக, திரைப்படத்தின் காட்சிகளுக்கும், வரலாற்று நாவல்களின் கதைக்கும் முரண் இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் இதில் சிக்கல் இல்லை. நாவல்களை அப்படியே படமாக்க முடியாது. சிறு சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திரைப்படத்திற்கு ஏற்ற சாராம்சத்தை சேர்க்க வேண்டியது வரும், சிலவற்றை வெட்டி எரிய வேண்டி வரும். நடிகர்களின் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில விஷயங்களை சேர்க்க வேண்டி வரும்.
உதாரணமாக எந்த வரலாற்று நாவலில் ஆவது பாடல் காட்சிகள் வருமா என்ற கேள்வியை இங்கு முன்னிறுத்திக் கொள்ளலாம். பொன்னியின் செல்வன் படத்திலும் கூட, ஏகப்பட்ட பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்கள் எந்த நோக்கத்தையும் நிறைவுசெய்யவில்லை என்றாலும், அதுதான் சினிமா. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வனை இரண்டே பாகத்தில் மணிரத்னம் எடுத்துள்ளார். அதற்குத்தான் படத்தின் தொடக்கத்திலேயே தழுவி எடுக்கப்பட்டது என்று போடுகிறார்கள்.
சில சமயங்களில் நாவல்களே கூட தழுவிதான் எழுதப்பட்டதாக இருக்கும். அப்படி, வரலாற்றைத் தழுவி ஏற்கனவே கற்பனைகளுடன் எழுதப்பட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலில் ராஜராஜ சோழனே பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படுவதாக இருக்கும். பொன்னியின் செல்வன் என்றால் ராஜராஜசோழன் என்று நம்பப்படுகிறது. நாவல் அப்படித்தான் சொல்கிறது. ஆனால், ராஜராஜ சோழனுக்கு அதாவது அருண்மொழித் தேவருக்கு பொன்னியின் செல்வன் என்ற விருதுப்பெயர் கொடுக்கப்பட்டதாக சான்றுகள் இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாவலில் வரும் ஆழ்வார்க்கடியான், நந்தினி ஆகிய கதாப்பாத்திரங்கள் கூட கல்கியின் கற்பனையில் உருவானவை. சோழர்கள் உடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தாலும் கூட, சுந்தரசோழர் காலத்தில் இரண்டு பழுவேட்டரையர்கள் இருந்தார்களா என்பதும், நந்தினியுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தார்களா என்பதும் கேள்வியே. எனவே, பொன்னியின் செல்வன் நாவலே வரலாற்றை புனைந்து எடுக்கப்பட்டது எனும்போது, அதனை தழுவி எடுக்கப்பட்ட படம் எப்படி வரலாற்றை அப்படியே கூறும்?
அதுதவிர பாகுபலி போன்று இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாகுபலி என்பது கற்பனைக் கதை. அதில், கதாநாயகன் மீது எதனையும் திணிக்க முடியும். ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்த முடியும், பணைமரத்தை வளைத்து பறக்க முடியும். வில்லை எய்து பெரிய மலையில் ஏற முடியும். பெரிய சிலையை ஒற்றை ஆளாய் தாங்க முடியும். அதேபோல்தான், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப்., போன்ற படங்கள். ஆனால், பொன்னியின் செல்வனில் அதனை செய்ய முடியாது. ஏனெனில் இது வரலாற்றுப்படம். தழுவி எடுக்கப்பட்டாலும் கூட, கிட்டத்தட்ட வரலாற்றை சொல்லும் படம். ஆனால், பாகுபலி போன்ற படங்கள் முற்றிலும் புனைவாக உருவாக்கப்பட்ட இயக்குநரின் கற்பனையில் பிறந்த படம். எனவே, அதில் சேர்க்கப்படும் அனைத்து விஷயங்களையும் பொன்னியின் செல்வனில் சேர்க்க வேண்டியதில்லை. இனிப்பு நன்றாக இருக்கிறது என்பதால் பிரியாணியில் கொஞ்சம் இனிப்பை சேர்க்க முடியுமா? அதுபோலத்தான் இதுவும். ஒருவேளை பொன்னியின் செல்வனை ஒப்பிட வேண்டுமானால், இதுபோன்று எடுக்கப்பட்ட வரலாற்றுப் படங்களுடன் அதனை ஒப்பிட வேண்டுமே தவிர புனைவுப் படங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
நாவல், திரைப்படம் இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி, அதன் காட்சிகளும் சம்பவங்களும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா சினிமாவாக இருந்தால் போதும். மூன்று மணி நேரம் காசு கொடுத்து பார்க்கும் பொழுதுபோக்கை அது பூர்த்தி செய்தால் போதுமானது. உண்மையில் பொன்னியின் செல்வனில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் கூட, அதன் மீது இவ்வளவு வன்மமும் தேவையில்லாத ஒன்று.