சேலம் / ஈரோடு: பல்வேறு நகரங்களில் பணியாற்று பவர்கள், ஆயுத பூஜை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை ஒட்டி, தங்கள் சொந்தஊருக்கு புறப்பட்டுச் சென்றதால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில், பயணிகள் நெரிசல் அதிகரித்தது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறை வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. இதேபோல தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இன்று முதல் 9-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில்பணியாற்றுபவர்கள், மாணவர்கள்உள்ளிட்டோரில் பெரும்பாலானோர் நேற்றே சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இதன் காரணமாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் காலை முதலே பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
பயணிகள் பலர் குடும்பம் குடும்பமாக உடைமைகளுடன் தங்களுக்கான பேருந்துகளில் இடம் பிடிக்க முயன்றதால், பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பரபரப்புடன், நெரிசலுடன் காணப்பட்டது. இதனிடையே, தொடர் விடுமுறையையொட்டி, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக கழக அதிகாரிகள் கூறியதாவது: சேலம் கோட்டத்தின் சேலம் மற்றும் தருமபுரி மண்டலங்களில் இருந்து, சென்னை, பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் 30-ம் தேதி (நேற்று)தொடங்கி, அக்டோபர் 1 (இன்று) மற்றும் 2-ம் தேதி (நாளை) வரை இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தருமபுரி, ஓசூர் நகரங்களுக்கு 50 சிறப்புப் பேருந்துகளும், சென்னையில் இருந்து நாமக்கல், ஆத்தூர், சேலம் நகரங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களுக்கு 80 பேருந்துகளும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 70 பேருந்துகள் என மொத்தம் 250-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறை முடிந்து, மீண்டும் ஊர் திரும்புபவர்களுக்கு வசதியாக, அக்டோபர் 4, 5, 6 தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, என்றனர்.
ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு முதல், சென்னை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பவ்வேறு ஊர்களுக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. பயணிகள் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.