பற்றி எரியும் ராஜராஜ சோழன் விவகாரம்; வெற்றிமாறனுக்கு சீமான் ஆதரவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெற்றிமாறன் தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள் என பேசியிருந்தார்.

வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் எழ ஆரம்பித்திருக்கிறது. ராஜராஜ சோழன் இந்து இல்லாமலா தஞ்சை பெரிய கோயிலை கட்டினார் போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதேசமயம் இந்து என்பது 1000 வருடங்களுக்கு முன்னர்தான் தோன்றியது. அப்படிப் பார்க்கையில் ராஜராஜ சோழன் இந்து கிடையாதுதான் என ஒருதரப்பினர் வாதம் வைத்துவருகின்றனர். இந்நிலையில் வெற்றிமாறனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ வெற்றிமாறன் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்திடமிருந்த திரைக்கலையைப் பொதுமைப்படுத்தியது அன்றிருந்த திராவிட இயக்கங்கள்தான். அன்றைய திராவிடத் தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,  எம்.ஜி.ஆர் போன்றவர்கள் திரைப்படத் துறையில்தான் பணியாற்றினார்கள். அதனால் வெற்றிமாறன் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

எங்களுடைய பெரும்பாட்டன் அருள்மொழிச்சோழனை இந்து மன்னன் என்று பேசுவதெல்லாம் ஒரு வகையான வேடிக்கைதான். வள்ளுவருக்குக் காவி சாயம் பூசி, அவரை ஆரியம் தன்வயப்படுத்திக்கொள்ள நினைப்பதைப் போல, ராஜராஜ சோழனையும் தன்வயப்படுத்தும் முயற்சிதான் அது. அந்தக் காலத்தில் இந்திய நாடும் இல்லை, இந்து மதமும் இல்லை என்பது உலகத்திற்கே தெரியும், ராஜராஜ சோழன் என்ற மன்னன் சிவனை வழிபட்ட சைவ மரபினன் என்பதுதான் உண்மை. பன்னிரு திருமறைகளைக் கறையான் அரிக்காமல் காப்பாற்றிக் கொடுத்தவர், அவர்தான். ‘ஏடு தந்தானடி தில்லையிலே’ என்ற பாடலெல்லாம் அதனால்தான் பாடப்பட்டது.

தமிழர் அடையாளங்களில் புகழ் பெற்ற எல்லாவற்றையும் ஆரியம் தனதாக்கிக்கொள்ள முனையும். அப்படித்தான் எங்கள் சிவனை, முருகனை தனதாக்கிக்கொண்டது. அந்த அடிப்படையில் ராஜராஜ சோழனையும் இந்து என்று தன்வயப்படுத்திக்கொள்ள ஆரியம் முயல்வதை அனுமதிக்கக் கூடாது என்றுதான் வெற்றிமாறன் சொல்கிறார். அதை நான் ஏற்கிறேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.