“ஒரு நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் தலை சாய நினைப்பது மல்லாங்கிணறில்தான்!" – தமிழச்சி தங்கபாண்டியன்

மதுரை புத்தகத்திருவிழாவின் 9-ஆம் நாளில் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியனின் ’மண்வாசம்’, ’சொட்டாங்கல்’, ’மயிலிறகு மனசு’ ஆகிய மூன்று நூல்களின் மறுபதிப்பு வெளியீட்டு விழா மண் வாசத்தோடு நடைபெற்றது.

விழாவில்

கவிஞர் மனுஷ்யபுத்திரன், வண்ணதாசன், கலாப்ரியா, ச.தமிழ்ச்செல்வன், பாரதி கிருஷ்ணகுமார், சு.வெங்கடேசன் எம்.பி, அ.முத்துக்கிருஷ்ணன், பர்வீன் சுல்தானா, சுகா ஆகியோர் கலந்துள்ள, கலகலவென்று நடந்தது நூல் வெளியீட்டு விழா.

மூன்று நூல்களையும் சு.வெங்கடேசன் வெளியிட வண்ணதாசன், கலாப்ரியா, பாரதி கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாளர் வண்ணதாசன் பேசும்போது, “நான் இதுவரை எங்கும் தலைமையுரை பேசியதில்லை. எப்படி பேசவேண்டுமென அறிந்தவனில்லை. ஆனால், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியதுண்டு. ஆர்.கே.நாராயணனுக்கு, மால்குடி நாள்கள் போல தமிழச்சிக்கு மல்லாங்கிணறு நாள்கள்” என்றார்.

கவிஞர் கலாப்ரியா,“இவரது மண் சார்ந்த மனிதர்களை எழுத்துவழி கண்ணில் காண முடிகிறது. தமிழச்சி, விரைவில் ஒரு நாவல் எழுத வேண்டும்” என்றார்.

தொடர்ந்து ச. தமிழ்ச்செல்வன், பாரதி கிருஷ்ணகுமார், பர்வீன் சுல்தானா, அ.முத்துகிருஷ்ணன், சுகா ஆகியோர், எளிய மக்களின் வாழ்வியலை இலக்கியமாக்கும் தமிழச்சியின் எழுத்தாளுமை பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

பர்வீன் சுல்தானா, அவள் விகடனில் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான `மயிலிறகு மனசு’ நூல், தன் மனதுக்கு நெருக்கமானது என்று குறிப்பிட்டு, அதில் சில பக்கங்களை பரவசத்துடன் வாசித்துக்காட்டிப் பாராட்டினார்.

விழாவில்

சு.வெங்கடேசன் பேசும்போது,“எம்.பி ஆன பிறகு நான் ஒரு கட்டுரை கூட எழுத முடியவில்லை. இவர் எப்படி 3 நூல்கள் எழுதி வெளியிடுகிறார் என்று முதலில் பொறாமையாக இருந்தது. பிறகுதான், இவையெல்லாம் இவர் எம்.பி ஆவதற்கு முன் எழுதிய நூல்கள் என்பது தெரிந்தது. அது ஆறுதலாக இருந்தது’’ என்று கலகலப்பூட்டியவர், ‘’நான் முதல் முறை நாடாளுமன்றம் சென்றபோது, ஏதோ காசிக்குச் சென்றதுபோல அத்தனை சாமியார்களுடன் அமர்ந்ததுபோல இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. அதற்கிடையிலும் எங்களது மக்கள் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் பேசும்போது எங்கள் நேரம் முடிவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பே முடிக்கச் சொல்லி விடுவார்கள். ஆனால், தமிழச்சிக்கு மட்டும் கூடுதலாக நேரம் தருவார்கள். நாடாளுமன்றத்தில், அந்த ரணகளத்திலும் செண்பகப்பூக்களுடன் வருகை தந்து ஆச்சர்யமூட்டுவார் தமிழச்சி. அவருடைய நூல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.

ஏற்புரையாற்றிய தமிழச்சி தங்கபாண்டியன்,“ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் காலடி எடுத்து வைத்தபோது அவருக்கு ஏற்பட்ட மன நிலையை இப்போது உணர்கிறேன். எத்தனையோ அரங்குகளில் என் புத்தக வெளியீடு நடந்திருந்தாலும், இந்த மண் நான் புரண்டு விளையாடிய, பதின் பருவத்தை கழித்த மண்.

தமிழச்சி தங்கபாண்டியன்

எனக்கு ஆதர்ஷமான ஆளுமைகளோடு இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி. மனுஷ்யபுத்திரன் எனக்கு செய்யும் நல்ல விஷயம், என்னுடைய புத்தகங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதுதான்.

கவிதை உலகத்துக்குள் நான் பிரவேசிக்கும்போது வன்ணதாசன் கவிதை என்னை ஈர்த்தது. அவரை நான் `தலை’ என்றுதான் அழைப்பேன். என் கவிதைக்கான அத்தனை ஊற்றும் அவர்தான். நான் கட்டாயபடுத்தியதால், முதல்முறையாக தலைமை தாங்கினார்.

கல்யாண்ஜியும், கலாப்ரியாவும் எனது இரு கண்களைப் போன்றவர்கள். இருவரின் கரங்களை பற்றிக் கொண்டுதான் கவிதை எனும் அந்த வெளிக்குள் சிற்றடி எடுத்து வைத்தேன்.

தமிழச்சி-பர்வீன் சுல்தானா

என் அம்மாவுக்கு கல்யாண்ஜியை ரொம்ப பிடிக்கும். அம்மாவுடன் அவர் வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளேன். என் தந்தை இறந்தபோது கலாப்ரியா அப்பா அனுப்பிய கடிதம், அதிலிருந்து என்னை மீண்டு வரச்செய்தது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கம்பீரமான குரலில் எந்தவொரு சமரசமுமில்லாமல் நாடாளுமன்றத்தில் தாய்த்தமிழில் உரையாற்றும் போது, நாங்கள் அப்படியே கழுத்து வலிக்கப் பார்த்துக்கொண்டிருப்போம். `பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பாண்டியர்கள், சோழர்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள். இதென்னடா, பின்னாடி வர்றான் பாரு என் தலைவன் வேள்பாரி’ என்று வந்த மீம்ஸை சு.வெ.க்கு பகிர்ந்தேன். ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டால் `வேள்பாரி’ உலக இலக்கியத்தில் சேரும். அவர் என் நூல்களை வெளியிட்டது மகிழ்ச்சி.

நூல் வெளியீட்டு விழாவில்

சமையலறை என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல, ஆண்களுக்கானதும்தான் என்பதை தன் செயல் மூலம் வெளிப்படுத்தி வருபவர் அண்ணன் ச.தமிழ்ச்செல்வன். 20 வகையான சட்னி வைப்பார். அவரும் நானும் கருசக்காட்டிலிருந்துதான் வந்திருக்கிறோம்.

பாரதி புகழ் பாடிவரும் பாரதி கிருஷ்ணக்குமார் என் அப்பாவை அறிந்தவர். என் அம்மாவிடம் உரையாடியவர். குறிப்பாக என் அப்பத்தா மீது அதிக அன்பு வைத்தவர். என்னோடு எழுத்துப் பயணத்தில் துணையாக வருபவர். கவிஞர்கள் மீது அதிகமான அபிப்ராயம் இல்லாத சுகா, என் நூல் குறித்துப் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.

மால்குடி டேஸ் மாதிரி மல்லாங்கிணறு டேஸ் என்றார்கள். எனக்கான மூலை மல்லாங்கிணறுதான். எனக்கான கதாபாத்திரங்களை அந்த மண்ணிலிருந்துதான் எடுக்கிறேன். எனக்கு ஒரு நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் தலை சாய நினைப்பது என் மண்ணில்தான். அங்குதான் என் வாழ்க்கையை செம்மைப்படுத்திய கொத்தனாரம்மா, குருவாச்சி, கச்சம்மா, கோமதியக்கா இருக்கிறார்கள். அவர்களையும் என் எழுத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

இன்றைக்கும் மல்லாங்கிணறு போனால் என்னை எம்.பி.யாகவோ, தமிழச்சியாகவோ தெரியாது. `சார் மக வந்திருக்கு’, `டீச்சர் மக வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். அதுதான் என் அடையாளம். என் மண் சார்ந்து, கரிசக்காடு சார்ந்து, மனிதர்கள் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து எழுதுவதுதான் என் எழுத்து” என்றார்.

மதுரையில், மண்மணக்க நடந்து முடிந்தது தமிழச்சி தங்கபாண்டியனின் புத்தக வெளியீட்டு விழா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.